திருச்சியில் பட்டப்பகலில் நடந்த ரத்தக் கொலையில், போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த இளைஞர், துரத்தி வந்த கும்பலால் கத்திக்குத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட விரோதத்தால் நடந்த இந்த கொடூரச் செயலில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பீமநகர் கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (25) ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். திருமணம் நடைபெற்ற ஒரு வருடமே ஆன நிலையில் அவருக்கு ஒரு வயது குழந்தையும் உள்ளது. நேற்று காலை மார்சிங்பேட்டை பகுதியில் டூவீலரில் சென்ற தாமரைச்செல்வன், இரண்டு பைக்கில் வந்த 5 பேர் கும்பலால் திடீரென மோதப்பட்டார். கீழே விழுந்த அவரை மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் கும்பல் தாக்கத் தொடங்கியது.
உயிர் தப்பிக்க ஓடிய தாமரைச்செல்வன் அருகிலிருந்த மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்துக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட நுழைந்து ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் பதுங்கினார். ஆனால் அவரை துரத்தி வந்த கும்பல் போலீஸ் அதிகாரி வீடு என்று பார்க்காமல் உள்ளே புகுந்து, சமையலறையில் மறைந்திருந்த தாமரைச்செல்வனை தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் சரமாரி வெட்டிக் கொலை செய்தது. தடுக்க முயன்ற சப்–இன்ஸ்பெக்டரையும் கும்பல் தாக்க முயன்றதாக தகவல்.
கொலைக்குப் பிறகு கும்பல் பைக்கில் தப்பி செல்ல, தகவல் அறிந்த வடக்கு மண்டல துணை கமிஷனர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, லால்குடியைச் சேர்ந்த சதீஷ், இளமாறன், பிரபாகரன், நந்து, கணேசன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

தாமரைச்செல்வனின் மனைவி பணிபுரிந்த பெயிண்ட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக இருந்த சதீஷ் ரூ.1.20 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அதைப் பற்றி ஏற்பட்ட தகராறே இந்த படுகொலையின் காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதற்காக முன்னர் சண்டை ஏற்பட்டிருந்ததாகவும், பழிவாங்கும் நோக்கில் கொலை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி வீட்டிற்குள் கூட புகுந்து வன்முறை நடத்திய இந்த கொடூரச் சம்பவம், திருச்சியில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!