சீனாவில் உணர்ச்சிகளை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாங் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு தந்தை, தனது 7 வயது மகனைக் காப்பீட்டுப் பணத்திற்காகவே கொலை செய்யத் தன் சகோதரரின் மகனுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். தொடர்ச்சியான பணப் பிரச்சினைகள் மற்றும் மனைவியின் தவறான உறவு குறித்த சந்தேகங்களால் கோபத்திலும் மன உளைச்சலிலும் இருந்த ஜாங், மகனைக் கொன்று அதன் மூலம் கிடைக்கும் பெரிய காப்பீட்டுத் தொகையைப் பெறத் தீர்மானித்தார்.
இதற்காக, லாரி உரிமையாளர் இரு பெரிய காப்பீடுகளை எடுத்திருந்த நிலையில், ஒரு போலி விபத்தை அரங்கேற்றத் தனது லாரி ஓட்டுநரான சகோதரர் மகனை அவர் அணுகினார். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சாலையோரம் தனது காரை நிறுத்திய ஜாங், மகனை வெளியே நிற்கச் சொல்லியுள்ளார். அதே நேரத்தில், அவரது சகோதரரின் மகன் லாரியை வேகமாக ஓட்டி வந்து நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதச் செய்து, சிறுவனை சம்பவ இடத்திலேயே பலியிட்டார். பின்னர், காவல்துறை வந்தபோது ஜாங் சோகமானவர் போல நடித்து, மகனின் உடலைக் கட்டிப் பிடித்து அழுததுடன், விபத்து குறித்த உண்மையை மறைத்துள்ளார்.
சிறிது மாதங்களுக்குப் பிறகு, ஜாங் 1,80,000 யுவான் (சுமார் ₹22.5 லட்சம்) காப்பீட்டுத் தொகையைப் பெற்று, அதில் 30,000 யுவானை (சுமார் ₹3.75 லட்சம்) சகோதரர் மகனுக்குக் கொடுத்துள்ளார். லாரி ஓட்டுநரான சகோதரரின் மகன் போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தது தெரியவந்ததால், காப்பீட்டுத் தொகை வழங்கப்பட மறுக்கப்பட்டது. பின்னர், உண்மையான லாரி உரிமையாளர் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், ஜாங் மற்றும் அவரது சகோதரரின் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.