தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு
Vikatan November 15, 2025 10:48 PM

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், அதனை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் முயற்சியாக யானை வாழ்விட மாற்றங்களை கண்டறிந்து மீண்டும் அதனை உருவாக்க தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்தும் விதமாக யானை தோழர்கள் என்ற குழு தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

யானை தோழர்கள்

குறிப்பாக, இந்த குழுவினர் விவசாயிகளாகவோ, பொதுமக்களாகவோ யாராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த யானை தோழர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.