கரூரில் 14 வயது பள்ளி மாணவிக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் கரூர் மாநகரை ஒட்டியுள்ள வெண்ணைமலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கு அருகிலேயே இருக்கும் வாங்கபாளையம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கார்த்திகேயன் பணிபுரியும் அதே பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவருக்கு, கடந்த நான்கு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்புக்கான அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகவல்லி அளித்த புகாரின் பேரில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.