ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி
BBC Tamil November 16, 2025 02:48 AM
Getty Images சித்தரிப்புப் படம்

"பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை.

பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார்.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பான்மையாக சொல்லப்படும் வழக்கமான 'ஞானத்திற்கு' முரணாக சர் ஸ்டீபனின் கோட்பாடு உள்ளது. அதாவது, பல நூற்றாண்டுகளாக மக்கள் முகங்களைப் பார்த்தே ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினார்கள். இது ஒருவரது உடலில் நிகழும் மாற்றங்களைப் பகுப்பாயும் ஃபிசியோக்னோமி (physiognomy) என்றழைக்கப்படும் ஒரு பண்டைய முறை.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்பட்டது. அதாவது, பெரிய தாடைகள், கன்னக் கதுப்பின் எலும்புகள், சமச்சீரற்ற முக அம்சங்கள், தட்டையான அல்லது பெரிதாக இருக்கும் மூக்கு, வலிமையான கண்புருவ முகடுகள் போன்றவை "நாகரிகம் குறைவான" மனிதர்களுடன் தொடர்புடைய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய தோற்றம் உடையவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படும் அபாயம் இருந்தது.

நிச்சயமாக, இது முற்றிலும் மடமைத்தனமான பார்வைதான். இது சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் உருவாக்கப்படும் தப்பெண்ணங்களுடன் தொடர்புடையது. இதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்து முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளது.

இருப்பினும், சில நவீன ஆய்வுகள், ஒருவர் தம்மை எவ்வளவு தூரம் கவர்கிறார், அவர்களின் முக சமச்சீர்மை, முகபாவனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனிதர்களை நம்புவது, சந்தேகிப்பதில் மக்கள் ஈடுபடுவதாகக் கூறுகின்றன.

இதன் மூலம், நேர்மையற்ற ஒருவரது முகத்தைக்கூட மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் நம்பகமான ஒன்றாகக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

அழகாக இருந்தால் நல்லவரா?

மக்கள் வெளிப்புறத்தில் தெரியும் மேலோட்டமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு, கவர்ச்சிகர தோற்றம் கொண்ட மக்கள் மிகவும் நேர்மறையாக உணரப்படுவதாகக் கூறுகிறது. அதாவது, அவர்கள் அதிக புத்திசாலிகளாக, திறமையானவர்களாக, நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

"எது அழகாக இருக்கிறதோ அது நல்லதாக இருக்கும் என்ற அனுமானம் இருக்கிறது" என்று கவன்ட்ரி பல்கலைக் கழகத்தின் உளவியலாளரும் விரிவுரையாளருமான ரேச்சல் மோலிட்டர் கூறுகிறார்.

"உங்களை ஒருவர் கவர்ந்திழுப்பதாகக் கருதினால், நேர்மறையான குணங்களாக நீங்கள் கருதும் குணங்களை அவர் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்" என்கிறார் ரேச்சல்.

BBC ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் சர் ஸ்டீபன் ஃப்ரை

கவர்ச்சி, அழகு ஆகியவை குறித்த பார்வை உலகம் முழுவதும் நீண்ட காலமாக பெருமளவில் வேறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 2015இல் வெளியான மற்றோர் ஆய்வு, கவர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கருத்துகளை ஆராய்ந்தது. ஒரு முகம் மிகவும் பொதுவானதாகவோ அல்லது சராசரியான ஒன்றாகவோ மாறும்போது, மிகவும் கவர்ச்சிகரமான, நம்பகமான முகமாகவும் அது மாறுகிறது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதன்படி, ஒருவர் குறிப்பிட்ட அளவிலான கவர்ச்சியைக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. அதுவே ஒருவர் அந்த வரம்பை மீறும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்போது, அவர் குறித்த பிறரின் நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது.

தன்னியக்கமாக, சுயநினைவின்றி வெளிப்படும் நமது "அனிச்சையான நம்பிக்கை", மகிழ்ச்சியாகவும் நட்புறவு கொண்ட வகையிலும் தோன்றக்கூடிய முக அம்சத்தாலும் தூண்டப்படலாம். கடந்த 2008ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது.

Getty Images முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், கோபம், சோகம் அல்லது நடுநிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகங்களைவிட, மகிழ்ச்சியான அல்லது புன்னகைக்கும் பாவனைகளைக் கொண்ட முகங்களை அதிக நம்பிக்கையானவை என மதிப்பிட்டனர்.

பிரெஞ்சு தன்னார்வலர்கள் மத்தியில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் உண்மையானதாக மதிப்பிடப்பட்ட புன்னகைகளைக் கொண்ட முகம் நம்பத் தகுந்தது என்றும் கருதப்பட்டதைக் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, அத்தகைய முகங்களைக் கொண்டவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம் என மக்களை நினைக்க வைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

சன்கிளாஸ், முகக்கவசம், முகத்தை மறைக்கும் வகையில் இருக்கும் நீளமான முடி ஆகியவை, நம்பகத்தன்மை அளவைக் குறைப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் ரேச்சல்.

என் முகம் எவ்வளவு நம்பகமானது?

என் முகம் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது எனக் கூறுமாறு சில ஆய்வாளர்களிடம் கேட்டேன். இது சற்று ஆபத்தானதாகத் தெரிந்தாலும், எனக்கு ஆர்வமாக இருந்தது.

அவர்கள் முதலில், என் முகம் எவ்வளவு சமச்சீராக இருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். சமச்சீர் என்பது முகத்தின் இருபுறமும் எவ்வளவு சீராக இருக்கிறது என்பதாகும்.

BBC பல்லப் கோஷ் தனது சொந்த முகத்தின் நம்பகத்தன்மையை ஆராயுமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார்

"மக்கள் பெரும்பாலும் சமச்சீரான முகங்களை மிகவும் அழகானவையாகக் கருதுகிறார்கள். அழகான முகங்கள் பெரும்பாலும் நம்பகமானவையாக கருதப்படுகிறது" என்று கூறினார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உளவியல் மற்றும் குற்றவியல் துறையில் விரிவுரையாளராக இருக்கும் மிர்சியா ஸ்லோடானு.

அதோடு ஹேலோ விளைவு என்ற ஒன்றும் உள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வழியில் நல்ல விதமாகத் தென்பட்டால், அவர் பிற விஷயங்களிலும் நல்லவராக இருப்பார் என்று கருதுவது.

உளவியலாளர் மிர்சா ஸ்லோடானு, "அனைவரிடமும் சிறிய அளவிலான சமச்சீரற்ற தன்மை இயல்பாக இருக்கும்" என்று விளக்கினார். ஆகையால், "சில சமச்சீர்மை அம்சங்கள் ஒருவரை நல்லவராகக் காட்டலாம். ஆனால், ஒரு முகம் மிகச் சரியானதாக இருந்தால் அது விசித்திரமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ தோன்றத் தொடங்குகிறது" என்கிறார் முனைவர் ஸ்லோடானு.

இந்தக் காரணத்தாலேயே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் அல்லது ரோபோக்களின் முகங்களின் சமச்சீர் மிகுந்த துல்லியத்தன்மை, பார்ப்போருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது.

BBC பல்லப் கோஷின் முகத்தில் உள்ள சமச்சீர்மையை முனைவர் மிலேவா ஆராய்ந்தார் (இந்தப் புகைப்படங்கள் தன்னார்வலர்களுக்கு காட்டப்பட்டவை அல்ல)

என் முகத்தை எப்படி அதிகம் நம்பகமான ஒன்றாகத் தோன்ற வைப்பது என்பதைக் காட்ட, மற்றொரு ஆய்வாளரான முனைவர் மிலா மிலேவா என் புகைப்படத்தில் சில திருத்தங்களைச் செய்தார். அவர் முக சமச்சீர்மையை சிறிது மாற்றி, என் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வந்தார்.

கூடுதலாக ஒரு படி மேலே சென்று, என் முகத்தை இளமையானதாகவும் பெண்மை கொண்டதாகவும் மாற்றிக் காட்டினார். அதாவது, பெண் முகங்கள், குரல்கள், பெயர்கள் பெரும்பாலும் ஆண் முகங்களைவிட நம்பகமானவையாகக் கருதப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு முகம் எவ்வளவு பெண்மையுடன் தெரிகிறதோ, அவ்வளவு நம்பகமானது என மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, அவர் 26 தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட என் முகத்தின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டினார். ஒவ்வொரு நபரும் 35 முகங்களின் புகைப்படங்களில் ஒன்றாக என் முகத்தையும் பார்த்தார்கள். அந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு முகத்திற்கும், 1 (நம்பகமானதல்ல) முதல் 9 (மிகவும் நம்பகமானது) என்ற அளவுகோலில் மதிப்பிட்டனர்.

இது ஓர் அதிகாரபூர்வ அறிவியல் ஆய்வு இல்லை. ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தன. அதாவது மக்கள் என் முகத்தின் இளைய, புன்னகைக்கும், பெண்மை கூட்டப்பட்ட வடிவத்தின் மீது அசல் முகத்தைவிட அதிகமாக நம்பிக்கை வைத்தனர்.

இந்தச் சோதனையின் இறுதியில் நான் எளிமையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது நான் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தால், மக்கள் என் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக நம்பக்கூடும்.

BBC குழு மனப்பான்மை மக்களின் முடிவுகளை அதிகம் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் மக்களின் மந்தை மனோபாவம்

ஆரம்பத்தில் பார்த்த கேம் ஷோவில் இருப்பதைப் போல, துரோகிகளைக் கண்டறிவதை பொறுத்தவரை, குழு மனப்பான்மை காரணமாக யாரை நம்புவது என்பது பற்றிய கேள்வி மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது.

முனைவர் மோலிட்டர் ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் துரோகிகளாக கேம் ஷோ நிகழ்ச்சியில் வந்தவர்களுடைய மிகப்பெரிய ரசிகராகவும் உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த இந்த ஆண்டின் போட்டியாளர்கள் ஒரேயொரு பொய்யரை அடையாளம் காண்பதற்குக் கூட இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து அவருக்குச் சொந்தக் கருத்து உள்ளது. அதாவது "குழு மனப்பான்மை மோசமான முடிவுகளை எடுக்கவே வித்திடுவதாக" அவர் வாதிடுகிறார்.

"துரோகத்திற்கான சான்றுகள் மெல்லியதாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும்கூட, மந்தை மனநிலை கொண்ட மக்களை அது கூட்டாகப் பிழை செய்வதற்கு இழுக்கிறது," என்று கூறுகிறார் அவர்.

மக்களின் மனம், குழு சிந்தனையில் எழக்கூடிய, பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடிய அனுமானத்தை ஆதரிக்காத ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார்.

ஒருவர் எவ்வளவு நம்பகமானவர் என்பது குறித்து மக்களுக்கு எண்ணங்கள் எழுவதன் வேகமும் இந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு நபரின் நம்பகத்தன்மையை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

Getty Images துல்லியமான சமச்சீர்மை இருப்பது, ரோபோ முகங்கள், டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் மீது மக்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது

நம்பிக்கையை அளவிடக்கூடிய திறன் என்பது, மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதாக முனைவர் மிலேவா விளக்குகிறார். "நமது முன்னோர்கள் ஒருவர் நண்பரா, பகைவரா என்பதை ஒரு நொடியில் சொல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் விரைவான சிந்தனைச் செயல்முறை. நம்பகத்தன்மை குறித்த நிலையான எண்ணங்கள் நமக்குள் உருவாவதற்கு ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமே ஆகிறது" என்று அவர் விளக்குகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அனிச்சையாக ஏற்படும் நமது நம்பிக்கைகள் விரைவாக உருவாகும் அதேவேளையில், அவை மிக மோசமானவை என்று மிலேவாவின் ஆராய்ச்சி காட்டுகிறது.

பொய்யர்களை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்?

பொய் கண்டறிதலுக்கான அறிவியல் அணுகுமுறைகள், ஏமாற்றுதலின் சமூகப் பங்கு ஆகியவற்றில் நிபுணரான மிர்சியா ஸ்லோட்டானு, விரைவாக உருவாகும் நமது அனிச்சையான நம்பிக்கை மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.

நம்பத்தகுந்த நபர்களையும் பொய் சொல்பவர்களையும் கண்டறிவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நமக்கு நாமே கருதிக் கொள்கிறோம் என்பதையும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

"வியர்வை, நேராகக் கண்களைப் பார்க்காதது, முகம் சிவத்தல், நடுக்கம் அல்லது பிற உடலியல் குறிப்புகளைத் தேடுவதன் மூலம் நம்மால் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துவிட முடியும் எனக் கருதுகிறோம். ஆனால், உண்மையில், இந்தக் குறிப்புகள் நம்ப முடியாத அளவுக்கு சுற்றியிருக்கும் சூழல் சார்ந்தவையாக உள்ளன. இவை ஏமாற்றுதலின் நம்பகமான குறியீடுகள் இல்லை" என்று கூறுகிறார் ஸ்லோடியனு.

Getty Images

"ஒருவர் பதற்றமாக, கூச்ச சுபாவமுள்ளவராக இருப்பதால் வியர்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது கண்களை நேராகப் பார்க்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பொய் சொல்வதாகப் பொருள் இல்லை. பெரும்பாலும், இந்த சமிக்ஞைகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில், அவை நேர்மையற்ற தன்மையைக் குறிப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியம் அல்லது உணர்ச்சித் தூண்டுதலின் அறிகுறிகளே" என்றும் அவர் விளக்கினார்.

பல்வேறு சோதனைகளில், தன்னார்வலர்கள், ஒருவரின் வீடியோவை பார்த்து, அவர் சொல்வது பொய்யா, உண்மையா என்பதைக் கண்டறிய, வியர்த்தல், விலகி வேறுபுறமாகப் பார்ப்பது, முகம் சிவத்தல் போன்ற வழக்கமான குறிப்புகளைப் பயன்படுத்தினார்கள்.

முனைவர் ஸ்லோடானுவும் அவரது குழுவினரும் சோதனைகளில் பங்கெடுத்த தன்னார்வலர்களால் உண்மை மற்றும் பொய்க்கு இடையிலான வித்தியாசத்தை அறிய முடியவில்லை என்பதையும், போலி உணர்ச்சிகள் அல்லது கற்பனையான கதைகள் போன்ற பல்வேறு வகையான பொய்களைக் கண்டறிவதில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

மீண்டும் குழு மனப்பான்மையுடன், தவறான பதிலையே உறுதி செய்வதில் அதிகமான மக்கள் ஈடுபட்டது துல்லியத்தன்மையை மேலும் குறைத்தது.

"அறிவியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் பொய்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பது புரியும். அதாவது இது அடிப்படையில் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, கையில் இருப்பது பூவா, தலையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிகரானதுதான்" என்று முனைவர் ஸ்லோட்டானு கூறினார்.

பொய்யர்களால் பிறரை முட்டாளாக்க முடிந்தது எப்படி?

ஆரம்பத்தில் கூறிய நிகழ்ச்சியில் பங்கெடுத்த துரோகிகளால் இவ்வளவு காலம் அனைவரையும் முட்டாளாக்க முடிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியப் பங்கைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படியெனில், தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பாடம் என்ன? நாம் நம்பும் நபர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதுதானா?

இது உண்மையெனில், அது எப்போதும் மோசமான விஷயமாக இருப்பதல்ல என்று முனைவர் ஸ்லோட்டியனு கூறுகிறார். பொய் சொல்வது நீண்டகாலமாக மிகவும் மோசமான விஷயமாக கருதப்படுகிறது என்று விளக்கும் அவர், "ஆனால் உண்மையில், கொஞ்சம் பொய் சொல்லும் திறனும், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் திறனும் இருப்பது சமூகத்தில் உதவிகரமாக இருக்கும்" என்கிறார்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சிறிய விஷயங்களில் பொய் கூறலாம். அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள். அல்லது கூடுதலாக ஒரு துண்டு கேக் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறீர்கள். இவை மோசமான பொய்கள் அல்ல. அவை நட்பை உருவாக்கிக் கொள்ளவும், நல்ல உறவுகளைப் பராமரிக்கவும், மக்கள் நல்லவிதமாக உணர்வதற்கும் உதவுகின்றன. இந்த வகையான பொய்கள், "பசை" போலச் செயல்பட்டு, மக்களை இணைக்கிறது.

ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளைக் கூறுகிறார்கள். அதாவது, நமது சொந்தச் சார்பு நிலைகளைப் புரிந்து கொள்வது, நமக்கு உடனடியாக ஏற்படும் முதல்கட்ட எண்ணங்களையே முற்றிலுமாக நம்பாமல் இருப்பது, உள்ளுணர்வுகளை மட்டுமே அதிகமாக நம்புவதைத் தவிர்ப்பதும், அதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த அடிப்படையில் பார்த்தால், சர் ஸ்டீபன் ஃப்ரை கூறியது சரிதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.