கும்கி 2 திரைப்படத்தை வெளியிட ஐகோர்ட் அனுமதி
Top Tamil News November 16, 2025 04:48 AM

இயக்குனர் பிரபு சாலமன்  இயக்கியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் 2012 ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி 2 படத்தை, பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள படம் இன்று வெளியிடப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. கும்கி 2 படத்தை தயாரிக்க, பிரபு சாலமன், 2018 ம் ஆண்டு வாங்கிய ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து  2 கோடியே 50 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நவம்பர் 12 ம் தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான பென் இந்தியா நிறுவனத்தின் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, படத்தின் தயாரிப்பாளர் பென் இந்தியா நிறுவனம் தான். தணிக்கை சான்று, தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ளதாகவும் பென் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு பென் இந்தியா பொறுப்பேற்க முடியாது என்பதால், தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கும்கி 2 படத்தை வெளியிட அனுமதித்து உத்தரவிட்டார். அதேசமயம், ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி, இயக்குனர் பிரபு சாலமனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.