கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாதம்: இந்த விஷயங்களை மட்டும் செய்ய மறந்துடாதீங்க!
TV9 Tamil News November 16, 2025 04:48 AM

கார்த்திகை மாதம் (17 நவம்பர் 2025 – 15 டிசம்பர் 2025) சிவபெருமானின் அருள் நிறைந்த புனிதமான காலம். இந்த மாதத்தில் தீப்பந்தங்கள் ஏற்றி வழிபடுதல், உடல் – மனம் சுத்திகரித்துக்கொள்ளுதல், ஆன்மீக வளர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. கார்த்திகை மாதம் தீப ஜோதி மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி மிகுந்த சக்தியுடன் இருக்கும் காலம். எனவே, தீப வழிபாடு மிகப் பெரும் பலனை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை தீபம், சிவனின் திருவடிகளை நினைவு கூற உதவும் சக்திவாய்ந்த மாதம் என்பதால், இந்த மாதத்தை சுத்தத்தோடும், பக்தியோடும் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, கார்த்திகை மாதத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காணலாம்.

தினசரி தீபம் ஏற்றுதல்:

கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டின் தெய்வ கோணத்தில், நுழைவு கதவு முன்பு மாலை நேரத்தில் கற்பூரம், நெய் அல்லது எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. தீப ஒளி எதிர்மறை சக்திகளை அகற்றி, மன அமைதி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும். குறிப்பாக, சிவபெருமானை தினமும் வழிபட வேண்டும். இந்த மாதம் சிவபெருமானுக்கே அன்பாக அர்ப்பணிக்கப்பட்டது.

Also Read : சிவன் பார்வை உண்டு.. கார்த்திகை மாதத்தின் அகல் விளக்கு தானம் தெரியுமா?

அசைவ உணவு கூடாது:

கார்த்திகை மாதத்தில் சைவ உணவு முறை மிகவும் முக்கியம். அதனால், இந்த மாதத்தில் முடிந்தவரை சைவ உணவுப் பழக்கம் மட்டுமே கொள்ள வேண்டும். அதிக எண்ணெய்/மசாலா தவிர்க்க வேண்டும். விரைவுணவு, மது, புகை போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுத்தமான உணவு உடலை சீராக்கி, மனதை தெளிவாக வைத்துக்கொள்ள உதவும் என்கின்றனர்.

அதோடு, பிரஹ்ம முகூர்த்தத்தில் (4:30–5:30) காலையில் எழுந்து குளியல், சிறிய தியானம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இவற்றை செய்வது ஆன்மீக சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர்.

முருக வழிபாடு:

கார்த்திகை மாதத்தின் சிறப்பு முருகனுக்கே. அதனால், “ஒம் சரவணபவ” மந்திரம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் படிப்பதன் மூலம் மனவலிமை, தைரியம், தடைகளை அகற்ற உதவும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

வீட்டை சுத்தமாக வைத்தல்:

கார்த்திகை மாதத்தில் வீட்டில் வாஸ்து சுத்தம், இடம் சுத்தம், மனசுத்தம் இவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும். வீட்டில் தூய்மை இருந்தால், தீபம் ஏற்றும் இடத்திலும் நேர்மறை சக்தியை உருவாகும். கார்த்திகை மாதத்தில் மன அமைதி மிக அவசியம். அதனால், கோபம், சீற்றம், சண்டை, பிறரைக் குறை கூறுதல் ஆகியவற்றை தவிர்க்கும்படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Also Read : ராஜ யோகம் 2025: துலாத்தில் சுக்கிரன் சூரியன் சேர்க்கை.. 5 ராசிக்கு அதிர்ஷ்ட பலன்கள்!

கார்த்திகை தீபத் திருநாள்:

துளசி தேநீர், சீரகம்–சுக்குப் பானம் போன்ற சூடான பானங்கள் உடலுக்கு நல்லது. காரணம், கார்த்திகை மாதம் குளிர் காலமாக இருப்பதால், உடல் சூட்டை சீர்செய்ய இது உதவும். எல்லா தீபங்களிலும் முக்கியமானது கார்த்திகை தீபம். அன்று வீட்டின், வாசல், திண்ணை, மாடி, கோவில் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது மிகுந்த புண்ணியம்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.