நவ்காம் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் 'எங்களின் தவறால் நடந்துவிட்டது' என்று ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், 09 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்னிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக என போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளதாவது:

''இது எங்கள் தவறுதான். இந்த வெடிபொருட்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுடன், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து முதலில் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இதன் விளைவாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளுக்கும் சேதமாகியுள்ளது.
டில்லியில் நடந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் வெளியே வரவில்லை. அங்கு காஷ்மீரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கை காட்டப்படுகிறார்கள். நாங்கள் இந்தியர்கள், இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நாள் எப்போது வரும்..?. இந்த டாக்டர்கள் ஏன் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்தனர். என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.