ஜடேஜாவை கொடுத்து சாம்சனை வாங்கியதால் சிஎஸ்கே அணிக்கு என்ன லாபம்?
BBC Tamil November 16, 2025 11:48 PM
Getty Images

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை.

16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன?

Getty Images இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள்

ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர்.

அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான்.

மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது.

இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன?

இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின்நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

"ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம்.

சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம்.

இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன்.

அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.

நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார்.

இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.

Getty Images தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன?

இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார்.

சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார்.

2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார்.

அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.

இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி?

இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார்.

"இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ்.

நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார்.

"சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்"

சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ்.

"சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ்.

சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர்.

அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.

சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ்.

Getty Images 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும்

ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ்.

"இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர்.

கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

"கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார்.

கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.