தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் திமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், நாளை (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு வரும் (20.11.2025) வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ஆக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, தி.நகர் சத்தியா, அசோக், ராஜேஷ், புரசை பாபு, கந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.