சென்னை, நவம்பர் 16, 2025: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சென்னை மாநகராட்சி தரப்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நவம்பர் 9, 2025 அன்று முதல் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகின்றன. அதைப் போலவே, செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமமும் வழங்கப்படுகிறது.
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்:தமிழகத்தில் நாளுக்கு நாள் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருநாய்களாக இருந்தாலும் சரி, வீட்டில் வளர்க்கும் நாய்களாக இருந்தாலும் சரி, மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெருநாய்களுக்கு மாநகராட்சி மருத்துவர்கள் நேரடியாக அவை இருக்கும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு சென்னையில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
மேலும், வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை எளிதாக பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் இந்த இலவச தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் ஆகும்.
உரிமம் பெற தவரினால் ரூ.5000 அபராதம்:வரக்கூடிய நவம்பர் 24, 2025க்குள் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறாவிட்டால் ஐந்து ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிமையாளர்களும் இந்த முகாம்களை பயன்படுத்தி செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த வாரம், அதாவது நவம்பர் 9, 2025 அன்று சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
இரண்டாவது வாரமான நவம்பர் 16, 2025 இன்று இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மேலே கூறப்பட்ட இடங்களில் நடைபெறுகின்றது. இதைப் போல, கடைசியாக நவம்பர் 23, 2025 அன்று இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம்களின் மூலம் உரிமம் பெறாத உரிமையாளர்கள், ஆன்லைன் மூலம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவேற்றி, விவரங்களை பூர்த்தி செய்து உரிமத்தைப் பெறலாம். உரிமம் பெற தவறியவர்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.