வானிலை நிலவரம், நவம்பர் 16, 2025: தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கச் சுழற்சியின் காரணமாக, நவம்பர் 15, 2025 தேதி ஆன நேற்று காலை இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:இதன் காரணமாக, நவம்பர் 16, 2025 தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17, 2025 ஆம் தேதி ஆன நாளை காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:அதேபோல, வரக்கூடிய நவம்பர் 18, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 19, 2025 முதல் 21 நவம்பர் 2025 வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி–மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக மாநில அளவில் போராட்டம் அறிவிப்பு – விஜய் பங்கேற்பாரா?
இது ஒரு பக்கம் இருக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்த நிலையில் இருந்தாலும், இன்று முதல் முழு வீச்சில் வடகிழக்கு பருவமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.