மதிமுகவில் வெடித்த உட்கட்சி குழப்பத்தால் மல்லை சத்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, வைகோ–துரை வைகோ மீது பல அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“வைகோவுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஒருகாலத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற அவரது நடைப்பயணங்கள், இன்று ரூ.1000 கொடுத்து கூட்டி வரப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன,” என அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து,“திமுக ஆட்சி அமைந்து 4.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாள் அமைதியாக இருந்த வைகோ, இப்போது திடீரென மதுவுக்கு எதிராகப் பேசுவது புரியாத விஷயம். இது மதிமுக இன்னும் உயிரோடிருக்கிறது என காட்டும் முயற்சி மட்டுமே,” என்றார்.
துரை வைகோவை குறிவைத்து,“28 ஆண்டுகள் அரசியல் செய்யாமல் வியாபாரத்தில் இருந்தவர். திடீரென பாராசூட்டில் இறங்கி தலைமைக்கு வருவதை நாம் ஏற்க முடியாது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடி சொத்து. மதுபான ஆலைகளில் இருந்து இன்னமும் வருமானம் வருகிறது,” என கடுமையாக பேசினார்.
அதுமட்டுமல்ல,“துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராக வேண்டுமென்பது தான் நோக்கம். அதற்காக பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறார். கடந்தகாலத்தில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் தவறானவை. இப்போது மதிமுக எங்கு செல்கிறது என்பதே கேள்வி,” என தெரிவித்தார்.
இறுதியில்,“மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாங்கள் அனைவரும் இணைந்து புதிய கட்சி தொடங்க உள்ளோம். வரும் 20-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என மல்லை சத்யா அறிவித்ததால், தமிழக அரசியலில் புதிய சர்ச்சைக்கு கதவு திறந்துள்ளது.