நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கோக்னிசண்ட் (Cognizant), தனது ஊழியர்களின் பணிகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் தாங்கள் ஒதுக்கப்பட்ட நேரங்களில் கணினி முன் இருந்து வேலை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க, ‘ProHance’ போன்ற பணியாளர் நிர்வாகக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தக் கருவியானது, ஊழியர் ஒருவர் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தைப் பதிவு செய்கிறது.
அதாவது, அலுவலகக் கணினியில், 5 நிமிடங்களுக்கு மேல் Mouse அல்லது விசைப்பலகை (Keyboard) இயக்கப்படாமல் இருந்தால், அந்த ஊழியர் செயலற்று இருப்பதாகக் கருதப்படுகிறது. அதேபோல், 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், அவர் பிற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த கண்காணிப்பு முறை ஒவ்வொரு குழுவுக்கும் (Team) வேறுபடுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கண்காணிப்பு செயல்முறை ஊழியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கோக்னிசண்ட் நிறுவனம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
அதாவது, இந்த கண்காணிப்பு மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கோ, பதவி உயர்வு , போனஸ் போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பதற்கோ பயன்படுத்தப்படாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
மாறாக, இந்தத் தரவுகள், பணியிட ஒதுக்கீடு மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் மேம்பாடு போன்ற உள் நிர்வாக நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும், ஊழியர்களின் தனிப்பட்ட வேலைச் சூழலை மேலாளர்கள் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.