யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்? கையாலாகாத திமுக அரசு? கொந்தளிக்கும் அண்ணாமலை!
Seithipunal Tamil November 19, 2025 01:48 PM

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி? 

நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் திரு. சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு  திமுக அரசே முழு பொறுப்பு.

கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் திரு. சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்? 

திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல.

தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.