'செயற்கை நுண்ணறிவு குமிழி வெடித்தால் ஒரு நிறுவனம் கூட தப்பாது' - சுந்தர் பிச்சை கூறியது என்ன?
BBC Tamil November 19, 2025 02:48 PM

செயற்கை நுண்ணறிவுக்காக்கான மவுசு குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசி நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார்.

சமீபத்திய மாதங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் இது பற்றிய அச்சங்கள் நிலவி வருகின்றன.

மேலும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் இந்த தொழில்துறையில் பெரிய அளவில் செலவு செய்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து கூகுள் தப்பித்துக் கொள்ளக்கூடுமா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னையை கூகுள் சமாளிக்க முடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார். ஆனால் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார்.

"நாங்கள் உட்பட எந்தவொரு நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாக தீவிரமான ஆய்வு இருக்கும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது.

Getty Images போட்டி யாருடன்?

ஆல்ஃபபெட் பங்குகளின் மதிப்பு ஏழு மாதங்களில் இரட்டிப்பாகி 3.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், கூகுள் நிறுவனத்துக்கு ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI உடனான போட்டியை சமாளிக்கும் திறன் அதிகம் உள்ளது என்று சந்தையில் நம்பிக்கை இருப்பதுதான்.

அல்பபெட் நிறுவனம் உருவாக்கி வரும் ஏ.ஐக்கான சிறப்பு சூப்பர் சிப்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த சிப்கள், சமீபத்தில் உலகில் முதல்முறையாக $5 டிரில்லியன் மதிப்பை எட்டிய, என்வீடியா நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன.

மதிப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வாளர்கள் OpenAI-ஐ சுற்றியுள்ள சிக்கலான 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு OpenAI- யின் வருமானம் மிகக்குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலீட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான வருவாயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Getty Images

டாட்காம் ஏற்றத்தின் போது, 2000 -ஆம் ஆண்டில் அந்த சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்பே, 1996-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் சந்தையில் நிலவிய "பகுத்தறிவற்ற உற்சாகம்" குறித்து எச்சரித்தார்.

அதே கருத்துக்களை எதிரொலிக்கும் தொனியில் பேசிய சுந்தர் பிச்சை, இது போன்ற முதலீட்டு சுழற்சிகளில் தொழில்துறை "மிகையாக முதலீடு செய்யக்கூடும்'' என்று கூறினார்.

"நாம் இப்போது இணையத்தை திரும்பிப் பார்க்கலாம். நிறைய அதிகப்படியான முதலீடு (அப்போது) இருந்தது, ஆனால் இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யாருக்கும் சந்தேகங்கள் இல்லை," என்று அவர் கூறினார்.

"ஏ.ஐயும் அதே மாதிரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது பகுத்தறிவு மற்றும் இது போன்ற ஒரு தருணத்தில் பகுத்தறிவற்ற கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

சிப் முதல் யூடியூப் தரவு, அதிநவீன அறிவியல் வரை – அனைத்தையும் சொந்தமாக கொண்டிருப்பது கூகுளின் தனித்துவம் என்றும் இதனால் செயற்கை நுண்ணறிவு சந்தை மாற்றங்களை சமாளிக்கும் நிலையில் கூகுள் இருப்பதாக பிச்சை கூறினார்.

சுந்தர் பிச்சையின் நிறுவனம் பிரிட்டனிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. செப்டம்பரில், ஆல்ஃபபெட் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டை உறுதி செய்துள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட அதன் முக்கிய செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப்மைண்ட் உட்பட பிரிட்டனில் "அதிநவீன" ஆராய்ச்சிப் பணிகளை ஆல்ஃபபெட் உருவாக்கும் என்று பிச்சை கூறினார்.

முதல் முறையாக, கூகுள் "காலப்போக்கில்" "நமது (ஏஐ) மாதிரிகளை பயிற்றுவிக்க" ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் கூறினார். இது பிரிட்டன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஏ.ஐ "வல்லரசு" ஆக பிரிட்டனை உறுதிப்படுத்தும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் நம்புகின்றனர்.

"பிரிட்டனில் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் முதலீடு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பிச்சை கூறினார்.

இருப்பினும், சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகின் மின்சார நுகர்வில் 1.5% ஆக இருந்த செயற்கை நுண்ணறிவின் அதிகபடியான மின்சார தேவைகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.

"ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த (நெருக்கடிக்கு உள்ளாக்க) விரும்பவில்லை. அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

தனது நிறுவனத்தின் விரிவடைந்து வரும் ஏ.ஐ முயற்சிகள் காரணமாக மின்சார தேவைகள் தீவிரமாக இருப்பதால், நிறுவனத்தின் காலநிலை இலக்குகளில் சறுக்கல் இருக்கின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2030-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கை ஆல்ஃபபெட் இன்னும் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

'மிக ஆழமான தொழில்நுட்பம்'

ஏ.ஐ நாம் வேலை செய்யும் முறையையும் மாற்றும் என்று சுந்தர் பிச்சை கூறினார். இது மனிதகுலம் பணியாற்றிய "மிக ஆழமான தொழில்நுட்பம்" என்று கூறினார்.

"சமூக இடையூறுகளுக்கு நடுவில் நாம் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார், இது "புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றும் கூறினார்.

"இது சில வேலைகளை உருவாக்கி மாற்றும், மேலும் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஏ.ஐக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்கள் "சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார்.

"நீங்கள் ஒரு ஆசிரியராக [அல்லது] மருத்துவராக இருக்க விரும்புகிறீர்களா என்பது முக்கியமல்ல. அந்த தொழில்கள் அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த தொழில்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்படும் நபர்கள் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.