சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் (One to One) ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்புகளில் மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழகச் செயலாளர்கள் வரை அனைவரும் கலந்துகொள்கின்றனர்.
அந்த வகையில், இன்று (நேற்று) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு, அவர் முன்னிலையில் நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தார்.
அதில், "வரவிருக்கும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்" என்று மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் அ.தி.மு.க.வுக்குச் சாதகமான நிலை இருப்பதாகக் கருதப்படும் நிலையில், தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் மிக முக்கியமான இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு நிர்ணயித்துள்ளார்.