சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கம்போல நேற்று மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. அப்போது, காலை 9 மணிக்கு மேல் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரும் வழியில் மின்சார ரெயில் சேவை 30 நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது. அதாவது, கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரெயில் ஒன்று காலை 9.30 மணியளவில் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, பின்னால் வந்த மற்றொரு ரெயில் சிறிது இடைவெளியில் அதன் அருகே நிறுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் சிறிது இடைவெளியில் 2 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஆபத்தை உணராமல் பயணிகள் பலர் பின்னால் நின்ற ரெயிலில் இருந்து இறங்கி, முன்னால் நின்ற ரெயிலில் இடம்பிடிக்க ஓடி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த ரெயில்களில் பயணித்த பயணிகள் பலரும் எழும்பூர், பூங்கா, கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்கின்றவர்கள். இவர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் மின்சார ரெயில்கள் டவுன் பஸ்போல ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், சில மாதங்களாகவே சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பரிதவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.