Getty Images
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், கார்த்திகை தீபத்தை முன்வைத்து அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. 'இதுதொடர்பாக 1996-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை அமல்படுத்த வேண்டும்' எனவும் அவை கோரிக்கை வைத்துள்ளன.
ஆனால், "அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை" என்று மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து மீண்டும் சர்ச்சை எழுவதன் பின்னணி என்ன?
அறநிலையத்துறை அறிவிப்பும் இந்து முன்னணி வலியுறுத்தலும்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைக்கின்றனர்.
2020ஆம் ஆண்டு மலையின் உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள இடத்தின் அருகில் சிலர் தீபம் ஏற்றினர். இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது.
இந்த ஆண்டும் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் 'இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' என்று இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
BBC
இதனை வலியுறுத்தி ராமரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
'பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சட்டவிரோதம். இது 1996-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது' என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் எனவும் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 13-ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது.
"திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்று கருதி அங்கு தீபம் ஏற்ற முடிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காத நீதிபதி, "யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அறநிலையத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு (நவம்பர் 19) நீதிபதி ஒத்தி வைத்தார்.
"சிக்கந்தர் தர்காவில் இருந்து பதினைந்து மீட்டருக்கு அப்பால் எந்தப் பக்கமும் தீபம் ஏற்றலாம் என 1996ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலையில் நாங்கள் குறிப்பிடும் தீபத்தூண் என்பது 60 மீட்டர் தொலைவில் உள்ளது" எனக் கூறுகிறார், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் இடையூட்டு மனு ஒன்றை இவர் தாக்கல் செய்துள்ளார்.
"தீர்ப்புக்குப் பிறகு 1996ஆம் ஆண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், 'தீபம் ஏற்றிக் கொள்ளலாம்' என தர்கா நிர்வாகம் கூறியது. ஆனால், அந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
Getty Images 1996ஆம் ஆண்டு தீர்ப்பு என்ன?
இந்து அமைப்புகள் மேற்கோள் காட்டும் வழக்கு என்பது 1994ஆம் ஆண்டில் இந்து பக்த ஞான சபை சார்பில் தியாகராஜன் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கனகராஜ், "மலையில் நெல்லித்தோப்புக்கு (தர்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது) 15 மீட்டருக்கு அப்பால் தர்கா இருப்பதைக் கணக்கில் வைத்துக்கொண்டு சரியான இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
விளக்கு ஏற்றுவதற்கு உரிய இடத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை கோவிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது. "இந்த விவகாரத்தில் பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவது என முடிவு செய்தனர். அதாவது ஏற்கெனவே விளக்கு ஏற்றப்பட்டு வரும் இடமே சரியான இடம் என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது" என்று கூறுகிறார், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
1996ஆம் ஆண்டு வெளியான தீர்ப்பில், 'தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் விளக்கு ஏற்ற வேண்டும்' என நீதிபதி குறிப்பிடவில்லை எனக் கூறும் வாஞ்சிநாதன், "தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மனு கொடுத்து ஓராண்டுக்குள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை" என்கிறார்.
Getty Images வழக்கில் நீதிபதிகள் கூறியது என்ன?
கடந்த 2014ஆம் ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ரிட் மனு ஒன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் மனுவில், 'கார்த்திகை தீபம் ஏற்றும் இடம் என்பது மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் உள்ளது. இது ஆகமத்துக்கு முரணானது' எனக் கூறப்பட்டது. ஆனால், 'அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
இதே வழக்கில் 2017ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'பல பத்து ஆண்டுகளாக கோவில் நிர்வாகமும் தர்கா நிர்வாகமும் கலந்து பேசி ஏற்கெனவே முடிவு செய்த இடத்தில் தீபம் ஏற்றி வருகின்றனர். 'அதை ஏன் இடையூறு செய்ய வேண்டும்?' எனக் கேள்வி எழுப்பினர்.
'தீபத்தை அதே இடத்தில் தொடர்ந்து ஏற்றலாம்' என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதைக் குறிப்பிட்டுப் பேசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "1996ஆம் ஆண்டு தீர்ப்பில் நீதிபதி என்ன கூறியிருந்தாலும் அதன் பிறகு இரு நீதிபதிகள் அமர்வு கூறியதை மட்டுமே செயல்படுத்துவார்கள். தற்போது இதே வழக்கை மீண்டும் ஒற்றை நீதிபதி விசாரிப்பதை ஏற்க முடியாது" என்கிறார்.
"வழக்கு தொடரப்பட்ட போதே தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை" எனவும் அவர் தெரிவித்தார்.
BBC மலை உச்சியின் இடதுபுறத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?
அதேநேரம், "காலங்காலமாக மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு வந்த இடத்துக்கு தீபத் தூண் எனப் பெயர் வைத்துள்ளனர். தீபம் ஏற்றப்பட்டு வந்ததால் இந்தப் பெயரை வைத்துள்ளனர். அங்கு ஏன் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி மறுக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்புகிறார், சோலைக்கண்ணன்.
இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "மலையில் உள்ள நில அளவைக் கல்லைத்தான் தீபத் தூண் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன" என்கிறார்.
"2017ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவை டிவிஷன் பெஞ்ச் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. அவ்வாறு முறையிட்டு உத்தரவு வாங்கியிருந்தால் அதைப் பற்றி பேசலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
"திருப்பரங்குன்றம் பெரிய மலையாக உள்ளது. தர்கா இல்லாத இடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் எனக் கூறுவதில் என்ன பிரச்னை? கோவில் நிர்வாகம் கூறும் இடத்திலேயே தீபம் ஏற்றுவதிலும் இவர்களுக்கு என்ன பிரச்னை?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
HANDOUT 'குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி' - தர்கா நிர்வாகி
இதுதொடர்பாக சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்பிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கோவில் நிர்வாகம் முடிவு செய்த இடத்தில்தான் விளக்கு ஏற்றப்படுகிறது. தர்காவுக்கு செல்லும் இடத்தில் நெல்லித்தோப்பு, படிக்கட்டுகள், மலையின் உச்சி மற்றும் அதன் அருகில் கொடிமரம் ஆகியவை உள்ளன" என்கிறார்.
"தர்காவுக்கு அருகில் அல்லாமல் சற்று தள்ளி தீபம் ஏற்ற வேண்டும் என்று 1996-ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிந்தைய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதனால், காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள குதிரை சுனை திட்டில் தீபம் ஏற்றினர். ஆனால், அந்த இடம் மக்களின் பார்வையில் தென்படவில்லை என்பதால் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுகின்றனர்." எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை கார்த்திகை தீப நாள் வரும்போதெல்லாம் மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில இந்து அமைப்புகள் செயல்படுவதாகக் கூறும் அல்தாஃப், "தர்காவுக்கு பின்புறத்தில் கொடிமரம் அருகில் தீபம் ஏற்றுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் எனச் சிலர் கருதுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
அறநிலையத் துறை கடிதம்இந்து அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கை தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையர் யக்ஞநாராயணினிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
அதேநேரம், "அரசு ஊழியராக உள்ளதால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்" என அறநிலையத் துறையின் மற்றொரு அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுகளைக் குறிப்பிட்டு, மலையின் மீது தீபம் ஏற்றி வழிபடுவதற்கு அனுமதி கோரி, இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையருக்கு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ராம ரவிக்குமார் (வழக்கு தொடர்ந்தவர்) மனு ஒன்றை அளித்துள்ளார்.
BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்குப் பதில் அளித்துள்ள துணை ஆணையர் யக்ஞநாராயணன், "வழக்கின் மனு, மேல்முறையீட்டு மனு ஆகியவற்றில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளின்படி தீபம் ஏற்றும் இடமான திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் 2025ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபம் ஏற்றப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
"தீபத் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பக்தர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் விழாவை சுமூகமாகவும் அமைதியாகவும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து கோவில் நிர்வாகம் மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.
தலைமை பட்டர் சொல்வது என்ன?திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் தலைமை பட்டர் ராஜாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
"கோவிலில் மரபுப்படியே அனைத்தும் நடந்து வருகிறது. தற்போது தீபம் ஏற்றப்படும் இடத்தில் 1982ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
"கோபுரத்துக்கு மேல் உச்சிபிள்ளையார் கோவில் உள்ளது. அங்குதான் தீபம் ஏற்றப்படுகிறது. அங்கே மோட்ச தீபம் இல்லை. கோவிலுக்குக் கீழ் பாறையில் செதுக்கி எண்ணெய் ஊற்றி எரிய வைப்பதுதான் மோட்ச தீபமாக உள்ளது" என்கிறார்.
"மூல ஸ்தானம், சொக்கப்பனை, கார்த்திகை தீபம் என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும். அது தவிர மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து எனக்குத் தெரியவில்லை" என்று அவர் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு