சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு ஓட்டுநர் கைது!
Seithipunal Tamil November 19, 2025 07:48 PM


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுத் துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூந்தமல்லி, நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வரும் 21 வயது மாணவி ஒருவர், கடந்த நவம்பர் 16-ஆம் தேதி கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.

அவர் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தவறான நோக்குடன் உரசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, உடனடியாக அந்த நபரை கண்டித்தார்.

ஆத்திரமடைந்த அந்த நபர், "இப்படித்தான் செய்வேன். உன்னால் முடிந்ததை செய்" என்று மிரட்டியவாறு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

வேதனையடைந்த மாணவி, இதுதொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர், தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கார் ஓட்டுநரான, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.