குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் பிரபலமான நடிகர் பிளாக் பாண்டி, வளர்ந்தபின் குணசித்திரமும், நகைச்சுவை வேடங்களும் செய்தாலும் எதிர்பார்த்த பெரிய வாய்ப்புகள் அவரை வந்தடைந்ததில்லை. ‘ஆட்டோகிராஃப்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘அங்காடித் தெரு’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. குறிப்பாக ‘அங்காடித் தெரு’ படத்தில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.
சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வருமானத்தை மனிதநேய பணிகளில் செலவழித்து வரும் பாண்டி, “உதவும் மனிதம்” என்ற அறக்கட்டளையை தொடங்கி பல மாணவர்களின் கல்விக்காக உதவி செய்து வருகிறார். இதுவரை இலங்கையைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட, மொத்தம் 75 மாணவர்களுக்கு கல்வி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தனது முயற்சிக்கு ஆதரவளிப்பதாக பாண்டி கூறினார்.
“நான் ஒழுங்காக படிக்கவில்லை என்ற வருத்தம் மனதில் இருக்கும்; அதனால் என் தங்கையை பொறியியல் படிக்க வைத்தேன். கல்விதான் ஒருவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். கல்விக்கு நிகர் எதுவும் இல்லை,” என பாண்டி உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும், மனிதநேயத்தில் முன்னணியில் நிற்கும் அவரது இந்த செயல், ரசிகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது.