தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கரூர் எம்பி ஜோதிமணி கூறிய தகவல் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“விஜய் காங்கிரஸுக்கு புதியவர் அல்ல. 2010-ஆம் ஆண்டு ராகுல் காந்தியை நேரடியாகச் சந்தித்து, காங்கிரஸில் இணைவதற்கான ஆலோசனைகள் நடந்தன. ஆனால் சில காரணங்களால் அந்த இணைப்பு நடைமுறைக்கு வரவில்லை,” என்று கூறினார்.இதன் மூலம், விஜய் மற்றும் காங்கிரஸ் இடையேயான பழைய தொடர்பை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
ஆனால் கடந்த வாரமே இதே சந்திப்பு பற்றி கேட்கப்பட்டபோது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,
“எனக்குத் தெரியவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல,” என மறுத்திருந்தார்.
ஆச்சரியமாக, விஜய்யின் 2010 தொடர்பு குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. ஜோதிமணியின் புதிய வெளிப்பாடு, காங்கிரஸ் உள்ளேயே சிறிய குழப்பத்தையும், அரசியல் வட்டாரத்தில் புதிய யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ராகுல் காந்தி விஜய்க்கு தனிப்பட்ட முறையில் போன் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் ராகுல் இந்தியா திரும்பியதும் கரூரில் நேரில் சந்திக்கவும், அதன்போது விஜய்ய சந்திப்பும் இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார்,“விஜயும் ராகுலும் கூட்டணி குறித்து எந்த பேச்சும் நடத்தவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்,” என்று தெளிவுபடுத்தினார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், புதிய கூட்டணிக் குழப்பம் வேண்டாம் என சமீபத்தில் தெரிவித்திருந்தாலும், ஜோதிமணியின் கூற்று—விஜய்யின் பழைய காங்கிரஸ் தொடர்பு—தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.