கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி மனு அளித்தார்.
முன்னதாக, மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்துத் தமிழக அரசிடம் அளித்திருந்தது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
மனுவில் உள்ள கோரிக்கை:
எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில், "எனது தலைமையிலான அம்மாவின் அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அறிவித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்றித் தர தமிழக மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்ட நிலவரம்:
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என்றும், அதில் சில விளக்கங்கள் கோரித் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்ற விதிமுறைகளைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பின்னணியில், இந்தத் திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்தக் கோரி பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.