கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!
TV9 Tamil News November 20, 2025 07:48 AM

சென்னை, நவம்பர் 19: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது, பாஜகவை தமிழக மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். போதிய மக்கள் தொகை இல்லாததால் இம்மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசனும், தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு வஞ்சகம் காட்டுவதாக சாடியிருந்தார். அதேசமயம், மதுரை, மெட்ரோ ரயில்வே திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், அதனை ஏற்காத தமிழக அரசு தொடர்ந்து, மத்திய அரசை விமர்சித்து வருகிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்

மக்கள் தொகை 20 லட்சம் இருக்க வேண்டும்:

அதாவது, மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அங்கு மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும், கோவை மற்றும் மதுரையில் அதற்கும் குறைவாக மக்கள் தொகை இருப்பதால், அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

அதோடு, பாஜக ஆளும் மாநிலங்களான ஆக்ரா, நாக்பூர், புனே, கான்பூர் போன்ற சிறிய நகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை இருந்தபோதிலும், அங்கு மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி நிலையில், பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்து வருகிறது.

கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”:


அந்தவகையில், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, “கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பொதுவானது அரசு:

மேலும், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க : SIR பணிகள் புறக்கணிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை..

மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்:

அதோடு, சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.