உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கடந்த நவம்பர் 15 அன்று ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தனது தந்தையால் புகார் அளிக்கப்பட்ட 30 வயதான சௌரப் என அடையாளம் காணப்பட்டார்.
சடலம் கிடப்பதாகக் கூறிய சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), அது ஏதோ ஓர் மிருகத்தின் தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என்று போலீஸாரிடம் பொய்யாகக் கூறியுள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சௌரப் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்ததால், போலீஸார் சுபாஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் விசாரணையில், சுபாஷ் தனது மகன் சௌரப்பைக் கொன்றதற்கான உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது, சுபாஷுக்குத் தனது மருமகளுடன் கள்ள உறவு இருந்துள்ளது. இந்த சட்டவிரோத உறவு குறித்து அவரது மகன் சௌரப்புக்குத் தெரியவந்ததால், அவர் தனது தந்தையை நேரில் பார்த்துச் சண்டையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், இந்த விஷயம் ஊர் முழுவதும் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், கடந்த நவம்பர் 12 அன்று சௌரப் வயலுக்குச் சென்றிருந்தபோது, மண்வெட்டியால் தாக்கி அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர், சடலத்தை கரும்புத் தோட்டத்தில் போட்டுவிட்டு, அது மிருகத்தின் தாக்குதல் எனக் கதைகட்டி நாடகமாடியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை போலீஸார் உறுதிசெய்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தை சுபாஷை போலீசார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளனர்.