இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தானின் வர்த்தக அமைச்சர்; இரு தரப்பு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை..!
Seithipunal Tamil November 20, 2025 06:48 AM

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி டில்லி வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றார். இந்நிலையில் அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி, இன்று (நவம்பர் 19) டில்லி வந்துள்ளார். இப்பயணத்தில் மத்திய அரசு அதிகாரிகளை அவர் சந்தித்து பேசவுள்ளார்.

ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகு தற்போது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் உறவு ஏற்பட தொடங்கியுள்ளது. மேலும், ஆப்கானில் எரிசக்தி மற்றும் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்ய இந்தியா முன் வர வேண்டும் என ஆப்கான் அமைச்சர் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானில் செயல்பட்டு வந்த இந்திய தொழில்நுட்ப மையத்தை, தூதரகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆப்கானின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி இன்று டில்லி வந்துள்ளார். 05 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சக அதிகாரிகளை சந்திப்பதுடன், இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியையும் பார்வையிடவுள்ளார்.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ''அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜ்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், முதலீட்டு உறவை மேம்படுத்துவதுமே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.'' என்று ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.