டெட் தேர்வு தொடர்பாக காலையில் வெளியிட்ட பதிவை பிற்பகலில் திடீரென நீக்கிய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. அதில் விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in மூலம் நாளை (20.11.25) முதல் டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு டெட் தேர்வு எழுதுவோர் செப்டம்பர் 1, 2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என வெளியிடப்பட்ட அறிவிப்பு தவறு, தேர்வுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்தது. டெட் தேர்வு தொடர்பாக காலையில் வெளியிட்ட பதிவை பிற்பகலில் திடீரென நீக்கிய ஆசிரியர் தேர்வு வாரியம், புதிய விண்ணப்ப தேதியை வெளியிடாததால் தேர்வாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு எப்போது? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.