டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருட்களில் காலாவதியான பொருட்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்கள் கடந்த செவ்வாயன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. X தளத்தில் வைரலான புகைப்படங்களில், பாகிஸ்தான்–இலங்கை கொடிகள் ஒட்டப்பட்ட மஞ்சள் நிற உதவிப் பொட்டலங்கள் காணப்பட்டன. அவற்றின் பேக்கேஜிங்கில் அக்டோபர் 2024 என காலாவதி தேதி அச்சிடப்பட்டிருந்ததாக பதிவிட்ட பயனர்கள் குற்றம் சாட்டினர். இதனால் இரு நாடுகளின் நெட்டிசனன்களும் கடும் விமர்சனங்களை எழுப்பினர்.
இஸ்லாமாபாத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த கப்பலில் உணவுப் பொதிகள், பால், குடிநீர், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர உதவியாக இவை அனுப்பப்பட்டன. இதை முன்னிட்டு, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதைப் புகைப்படங்களுடன் பகிர்ந்து, “பாகிஸ்தான் எப்போதும் இலங்கையுடன் இருக்கிறது” என ஒற்றுமையை வலியுறுத்தியது.
ஆனால், இலங்கையின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை இணைந்து நடத்திய ஆய்வில், பொதிகளில் சில காலாவதியானவை அல்லது பயன்படுத்த முடியாதவை என கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அவர்கள் “கடுமையான கவலைக்குரிய விஷயம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து நெட்டிசன்களும் பாகிஸ்தான் அதிகாரிகளை விமர்சித்து வருகின்றனர். ஒருவர், “காலாவதியான பொருள்களா? கொஞ்சம் வெட்கப்படுங்கள்” என கடும் கோபம் வெளியிட்டுள்ளார்.
தற்போதைக்கு, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் அரசு எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடவில்லை. காலாவதியான பொருட்கள் விநியோகிக்கப்பட்டனவா அல்லது தடுத்து வைக்கப்பட்டனவா என்பதையும் இலங்கை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.