சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனுடன் வந்திருந்தார்.
பின்னர் அந்தப் பெண்ணும் அவரின் மகனும் வீட்டுக்குச் செல்ல நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றார். மகன் முன்பு தனக்கு நடந்த கொடுமையால் அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜா பத்ரா (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதனால் சுராஜா பத்ராவைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சுராஜா பத்ரா, மதுரவாயல், சீமாத்தம்மன் காலனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!