அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் சிலிண்டரை பதுக்குவதை தடுக்க வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது புதிய சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும். இந்த இடைவெளியை மத்திய அரசு 25 நாள்களாக அதிகரித்து இருக்கிறது.
இதில் அதிக அளவில் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஹோட்டல் துறை கடுமையாக பாதித்து இருக்கிறது.
சிலிண்டர் சப்ளை சீராகவில்லை என்றால் அடுத்த சில நாள்களில் உணவகங்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மும்பையில் உள்ள சுமார் 20% உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. பெங்களூருவில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. பெங்களூருவின் புகழ்பெற்ற வித்யார்த்தி பவன் போன்ற பிரபல உணவகங்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துள்ளன.
இது குறித்து அகில இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவக சங்கத்தின் தலைவர் விஜய் ஷெட்டி கூறுகையில், ''பற்றாக்குறை வேகமாக பரவி வருகிறது. விரைவில் ஹோட்டல் துறை முடக்கப்படக்கூடும். இந்த பற்றாக்குறை தொடர்ந்தால் மும்பையில் உள்ள அனைத்து உணவகங்களும் அடுத்த இரண்டு நாட்களில் மூடப்படும்" என்று தெரிவித்தார். மேலும், இந்த சங்கம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மகாராஷ்டிரா சிவில் சப்ளை துறை அமைச்சர் சகன் புஜ்பாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஷெட்டி கூறினார்.
"இன்றைய நிலவரப்படி, எங்கள் உறுப்பினர்களில் 10–20 சதவிகிதம் பேர் சிலிண்டர் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொள்கின்றனர். நாளைக்குள் இது 60 சதவீதமாக இருக்கும். நாளை மறுநாள், உணவகங்களில் இது 100 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் அவை மூடப்படும்" என்று அவர் கூறினார்.
வணிக சிலிண்டர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை முதல் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வீட்டு சிலிண்டர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு முதல் எட்டு நாள்கள் கழித்து டெலிவரி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் அன்னு ஷெட்டி கூறுகையில்,''வணிக எல்பிஜி சிலிண்டர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. சில இடங்களில் அது கிடைக்கிறது, ஆனால் ரூ.1,750 விலையில் உள்ள சிலிண்டர் ரூ.1,950க்கு விற்கப்படுகிறது” என்று அவர் கூறினார். சில ஹோட்டல்கள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன.
பெங்களூருவிலும் இதே நிலைதான் இருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ''எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால், நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும். சிலிண்டர் பற்றாக்குறை சாதாரண மக்கள், மாணவர்கள் மற்றும் தினசரி உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருக்கும் மருத்துவ நிபுணர்களை பாதிக்கும்" என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சந்த சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் கூறுகையில்,''பற்றாக்குறை தொடர்ந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டல்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை.
எரிவாயு இல்லாமல், நாளை முதல் ஹோட்டல்களில் உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்காது. ஹோட்டல்கள் திறக்கப்படாது. நாங்கள் மத்திய அமைச்சர்களிடமும், பெங்களூருவைச் சேர்ந்த எம்.பி.க்களிடமும் பேசி தகவல் அனுப்பியுள்ளோம். எரிவாயு இல்லாமல், உணவு தயாரிக்க முடியாது, எனவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிடவேண்டும்.” என்று கூறினார். இதே போன்று சென்னை, டெல்லி போன்ற நகரங்களிலும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், இந்தியா தனது எல்பிஜி இறக்குமதிக்கு 85% நம்பியிருக்கும் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரவேண்டிய எரிவாயு வரவில்லை.