தவெக நிர்வாகிகளுடன் விஜய் நேர்காணல்
Top Tamil News March 10, 2026 07:48 PM

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்திவருகிறார்.

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது அப்பணிகளும் நிறைவடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் விருப்ப மனு பெற்றதாக பேசபடும் நிலையில், இதுவரை எத்தனை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது அதேபோல பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விருப்ப மனுக்கள் எத்தனை என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்திவருகிறார். இந்த நேர்காணலின் சிறப்பே விஜய் ஓர் புதிய வழிமுறையை பின்பற்றுவதுதான். பொதுவாக ஒரு கட்சியில், விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தான் நேர்காணல் நடத்துவார். அப்படியாவது ஒரு தலைவரை நேரில் சந்தித்து பேசிவிட மாட்டோமா என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுவை வழங்குவதுண்டு. அப்படி இருக்கையில், விருப்ப மனு அளித்தவர்களை கூட நேரில் சந்தித்து பார்க்க முடியாத புதிய யுக்தியை தான் விஜய் கையாளுகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களை ஒரு தொகுதிக்கு நான்கு பேரை தலைமை நிர்வாக குழு தேர்வு செய்து தலைவர் விஜய்யிடம் சமர்ப்பிப்பார்கள், அந்த நான்கு பேரைதான் விஜய் நேர்காணல் செய்கிறார். நேர்காணல் நடத்தும் முதல் நாளான இன்று ஏற்கனவே முக்கிய தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களை மட்டுமே நேர்காணல் நடத்துகிறார். 

அதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த வழிமுறை தவெக கட்சித் தொண்டர்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியதோடு , சொந்தக் கட்சியில் போட்டியிட விரும்புவோரை கூட தலைவர் பார்க்க மாட்டாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த பலரும் இந்த செய்தி அறிந்து உச்சகட்ட கோவத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தொண்டர்கள் தரப்பில் பேசப்படுகிறது. விஜய் இன்று நடத்தும் நேர்காணல் முதல் கட்டமா அல்லது ஒரே கட்டமா என்பது தொடர்பான விவரங்கள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.