'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி?
BBC Tamil December 04, 2025 07:48 PM
BBC Sinhala

"நாங்கள் சென்ற பேருந்துக்கு சுமார் 100 அடி முன்பாக ஒரு பெரிய பாறை உருண்டோடியது. கொஞ்சம் முன்பாக சென்றிருந்தால் ஆபத்து நேரிட்டிருக்கும். கடுங்குளிர், மழை-காற்றை தாண்டி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு பல சிரமங்களை கடந்துதான் திரும்பினோம்," என்கிறார், சென்னையை சேர்ந்த 65 வயதான சண்முக சுந்தரம்.

இலங்கை முழுவதும் பரவலாக 'திட்வா' புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், பலர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணமாக சென்று பல இன்னல்களை கடந்து மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளனர்.

சென்னை முகப்பேரை சேர்ந்த 29 பேர் கடந்த நவம்பர் 25ம் தேதி சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றனர். இவர்களுள் 15 பேர் பெண்கள், இருவர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

நவம்பர் 27ம் தேதி வரை நன்றாக சென்றுகொண்டிருந்த பயணம், அதுபின்பு "ஆபத்தான" பயணமாக மாறியுள்ளது. கடும் மழை, மண்சரிவுக்கு மத்தியில் இரு நாட்கள் பேருந்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடும் இருளுக்கு மத்தியில் போதிய தண்ணீர் வசதியோ அல்லது கழிவறை வசதியோ இன்றி சிரமங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு திரும்பியுள்ளதாக, பிபிசியிடம் பேசிய சில பயணிகள் கூறினர்.

இலங்கைக்கு குழுவாக பயணம் சென்றவர்களுள் சென்னையை சேர்ந்த சிதம்பரநாதன் என்பவரும் ஒருவர்.

"இலங்கைக்கு சென்றதும் முதலில் திருகோணமலையை சுற்றிப்பார்த்தோம். நவம்பர் 27 அன்று அங்கிருந்து கண்டிக்கு சென்றோம். கண்டியிலேயே மழை தொடங்கிவிட்டதால் எங்களால் அதன்பின் எங்கும் செல்ல முடியவில்லை. அதனால் அங்கிருந்து நுவரெலியா செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆனால், நுவரெலியாவுக்கு செல்லும் வழியில் நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு 6 கி.மீ. முன்பாகவே சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது."

நுவரெலியா மலைப்பகுதி என்பதால், அங்கே சென்றுவிட்டு பின்னர் இயல்புநிலை திரும்பியதும் கீழே இறங்கலாம் என பயணிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், மண்சரிவால் பாதை துண்டிக்கப்பட்டதால் அவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்துக்குள்ளேயே தஞ்சம்

இவர்களின் பேருந்து நின்ற பகுதியில் குடியிருப்புகள் இல்லை. அடர்ந்த காடு போன்ற பகுதி. மேலும், ஆங்காங்கே ஓரிரு சிறிய கடைகளே இருந்துள்ளன. அவர்களின் பேருந்து நின்ற இடத்தில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர்.

இதனால், மீண்டும் பேருந்தை திருப்பி கண்டிக்கு செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால், அங்கும் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

BBC Sinhala

"அதனால், எங்கள் பேருந்து எங்கு நின்றதோ அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருகில் எந்த ஹோட்டல்களும் இல்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர் இல்லை." என்கிறார், சிதம்பரநாதன்.

இதனால், பேருந்திலேயே அவர்கள் தங்க நேரிட்டது. மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் குளிர் மற்றும் மழையில் பேருந்திலேயே இருக்க வேண்டியிருந்தது மிக சிரமமாக இருந்ததாக பயணிகள் கூறினர்.

"மொபைல் டார்ச் லைட் வைத்துதான் அன்றைய இரவை கழித்தோம். எங்களிடம் இருந்த சில குடைகளும் காற்றில் பிய்த்துக்கொண்டு போய்விட்டது." என்கிறார், மற்றொரு பயணியான சண்முக சுந்தரம்.

BBC இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம்

அருகில் கழிவறை கூடஇல்லாத நிலையில், அக்குழுவில் இருந்த பெண்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கலைவாணி என்ற பயணி கூறுகையில், "பெண்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்னையாக இருப்பது கழிவறைதான். அதுவும் இதுபோன்ற இக்கட்டான சூழலில் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கடும் குளிரில் அடிக்கடி கழிவறையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், பேருந்தில் இரவை கழித்தபோது, சிறுவெளிச்சமும் இல்லாத கும்மிருட்டில் கழித்தது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்துகொண்டோம்." என்றார்.

மேலும், அவர் கூறுகையில், "ஒரு நாள் இரவு முழுவதும் பேருந்திலேயே தங்கினோம். அதற்கடுத்த நாள் மாலைதான் ரயில் நிலைய அறைக்கு பெண்கள் செல்ல முடிந்தது. உள்ளூர் மக்கள் சிலரும் எங்களுக்கு உதவினார்கள்." என்றார்.

பேருந்தில் அடுத்தடுத்து செல்போன் துண்டிப்பு, சார்ஜ் இல்லாதது என வெளியுலகை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்கின்றனர் பயணிகள். மறுநாள் மாலை தான் சென்னையில் இருந்த தங்கள் நண்பர்களை தொடர்புகொண்டு தெரியப்படுத்த முடிந்ததாக கூறினர்.

Kalaivani

இதற்கிடையில், அவர்கள் சிரமங்களுக்கு மத்தியில் பேருந்து மூலம் நுன் ஓயா ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர்.

அருகிலிருந்த ரயில்வே நிலையத்தில் இருந்த விருந்தினர் அறை மற்றும் சிறிய உணவகம் ஒன்றிலிருந்த அறையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், வேறு அறைகள் இல்லாததால், ஆண்கள் இரண்டு தினங்களும் பேருந்தில்தான் இருந்ததாக சிதம்பரநாதன் தெரிவித்தார்.

"எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த தினேஷ் என்பவர் பேருந்திலிருந்த இரு தினங்களும் அவரால் முடிந்தளவுக்கு தோசை, பரோட்டா என அங்கு கிடைத்த உணவுகள், தண்ணீர் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்." என்கிறார் சிதம்பரநாதன்.

BBC கோப்புப்படம் 'பெரிய பாறை உருண்டோடியது'

சாலைகள் ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட பின்னர் நுவரெலியாவுக்கு 6 கி.மீ. சுற்றி செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். அப்போது நேர்ந்த சம்பவத்தை விளக்கினார் சண்முக சுந்தரம்.

"நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்துக்கு 100 மீட்டர் முன்பு பெரிய பாறை ஒன்று விழுந்தது. கொஞ்சம் முன்பு சென்றிருந்தால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஒரு சிறிய மலையே சாலை முன்பு கிடந்தது போன்று இருந்தது. அந்த இடத்தில் பேருந்தை திருப்புவதும் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது." என்றார் அவர்.

இந்த மண்சரிவு தனக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியதாக நினைவுகூர்கிறார் கலைவாணி.

Kalaivani

"நுவரெலியா செல்லும்போது பேருந்து முன்பே மண்சரிவு ஏற்பட்டது, பாறை உருண்டு வந்தது. அது மிகச்சிறிய சாலை என்பதால் ஓட்டுநர் மிகவும் கடினப்பட்டு பேருந்தை திரும்பினார். அந்த இடத்தில் மிகவும் பயமாகத்தான் இருந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை." என்றார் கலைவாணி.

கடும் குளிரில் பேருந்தில் பயணித்தது மிகுந்த சிரமமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன் இந்த பயணிகளால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், இலங்கை சுற்றுலா துறையின் உதவியை நாட முடிந்தது. மேலும், இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தங்களுக்கு உதவியதாக பிபிசியிடம் பேசிய பயணிகள் தெரிவித்தனர்.

அதன்பின், பயணிகள் ஆபத்தான பாதையில் ஹட்டன் எனும் சிறுநகரத்தை வந்தடைந்துள்ளனர்.

"செந்தில் தொண்டைமானை நாங்கள் தொடர்புகொண்டோம். அவர் மிகவும் உதவியாக இருந்தார்.'' என்றார் கலைவாணி

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டின் பேரில் தங்க இடம் கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், ஊர் திரும்புவதற்காக ஹட்டனிலிருந்து கொழும்பு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஹட்டனிலிருந்து கொழும்புவுக்கு இடையே சுமார் 132 கி.மீ. சுமார் 4 மணிநேரத்தில் அடைய வேண்டிய இத்தொலைவை ஆபத்தான பாதையில் சுமார் 13 மணிநேரம் பயணித்து அடைந்துள்ளனர்.

நவம்பர் 29ம் தேதிதான் எங்களால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடிந்தது. நவம்பர் 30ம் தேதி 13 மணிநேரம் பயணித்து கொழும்புவை அடைந்தோம். கொழும்புவை அடைய இரவு 12 மணி ஆகியிருந்தது. ஆனால் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு எங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கான விமானம் புறப்பட்டுவிட்டது. இதனால், தமிழ்நாடு அரசு மற்றும் செந்தில் தொண்டமான் உதவியுடன், இலங்கை அரசை வலியுறுத்தி நாங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டில் இரவு விமானத்தில் மீண்டும் சென்னை திரும்பினோம்." என்று விவரித்தார் சிதம்பரநாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.