கடந்த சனிக்கிழமை அன்று, விர்ஜினியாவின் ஆஷ்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையில் நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள் அன்றாடச் சோதனைகளுக்காக கழிவறைக்குச் சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக, உள்ளே ஒரு அத்துமீறி நுழைந்த உயிரினம் மயக்கமடைந்து தரையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அது மனிதன் அல்ல, நரி போன்ற உயிரினமான ஒரு ரேக்கூன் ஆகும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த ரேக்கூன், ஏபிசி மதுக்கடைக்குள் புகுந்து, அடுக்கப்பட்டிருந்த ரேக்குகளை உடைத்து பல பாட்டில்களில் இருந்த மதுபானத்தைக் குடித்துவிட்டு, பிறகு கழிவறையில் இருந்த கமோட் பக்கத்தில் அப்படியே மயங்கி படுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
https://www.facebook.com/100068123049792/posts/pfbid02W15JPw2tgLviHY9uLSpPhCrTHnUNZ84Kzoa7r3HcG6nbQGqhwGAY4qzmucx2WbQDl/
சம்பவ இடத்திற்கு வந்த ஹனோவர் கவுண்டி விலங்குப் பாதுகாப்பு மற்றும் காப்பக அதிகாரி மார்ட்டின், சிறிய ரேக்கூன் கடை அலமாரிகள் பலவற்றை சேதப்படுத்தியிருப்பதைக் கண்டார். அங்குள்ள காட்சியைக் கண்டபோது, ரேக்கூன் எந்த அளவுக்கு குதூகலமாக ‘பார்ட்டி’யை கொண்டாடியிருக்கும் என்பதை அவர் உணர்ந்தார்.
மீட்கப்பட்ட நேரத்தில், ரேக்கூன் முழுவதுமாக மதுபோதையில் இருந்தது என்று காப்பக இல்லம் அதன் ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அதிகாரிகள், நகைச்சுவையாக, “இந்த உயிரினம் ஹேங்ஓவரால் பாதிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் மதுபோதையில் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அதற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை,” என்று பதிவிட்டுள்ளனர்.