35 வருஷ சுவாசக் கோளாறு..! “மூக்கு மூடிய மர்மம்”… என்னதான் உள்ள இருந்துச்சு..? மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்…!!
SeithiSolai Tamil December 05, 2025 01:48 AM

சுவாசிப்பதில் 35 ஆண்டுகளாக ஏற்பட்ட சிரமம், சைனஸ் பிரச்சனை என்று நினைத்திருந்த அர்ஜென்டினா பெண்ணின் மூக்கிலிருந்து, மருத்துவர்கள் கண்டெடுத்தது டேப் துண்டு எனும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாயும், உடல்நலம் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வரும் செல்வாக்கு செலுத்துபவருமான கேண்டெலா ரெய்பாட் என்ற இப்பெண், சிறு வயதிலிருந்தே ஒரு பக்க மூக்கில் சுவாசிப்பதில் சிக்கல் அனுபவித்து வந்தார். ஜாக்கிங் செய்வது முதல் இரவில் தூங்குவது வரை, எப்போதும் வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த சிரமம் சைனஸால் ஏற்பட்டது என நினைத்த அவர், கடந்த ஆண்டு வலி அதிகரித்ததால் மருத்துவரை சந்தித்தார். மேற்கொள்ளப்பட்ட CT ஸ்கேன்–ல், அவரது மூக்கின் உள்ளே ஒரு வெளிப்பொருள் சிக்கியிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சையில், மருத்துவர்கள் ஒரு மணி நேரம் போராடி, உள்ளே மறைந்து இருந்த பொருளை வெளியே எடுத்தனர்.

அவர்களைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்த அந்தப் பொருள், மடிந்த நிலையில் இருந்த ஒரு டேப் துண்டு. இது 35 ஆண்டுகளாக மூக்குக்குள் சிக்கித் தங்கி, அவரது சுவாசத்துக்கு தடையாக இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது எப்படி ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ள முடியாத கேண்டெலா, குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, 1990-ஆம் ஆண்டு சுவாச கோளாறால் ஒரு குழாய் (Tube) மூக்கில் மருத்துவர்கள் செலுத்திய போது, டேப் துண்டு தவறுதலாக உள்ளே போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டேப் அகற்றப்பட்ட பிறகு, “35 ஆண்டுகளுக்குப் பிறகு என் மூக்கு திறந்தது போல உணர்கிறேன். இப்போது சுதந்திரமாக சுவாசிக்க முடிகிறது” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விசித்திரமான மருத்துவ வழக்கு, சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.