அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நசீர் ஹமீது (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு, தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிஸ் ஆகியோரைக் கொலை செய்துவிட்டு, அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொலையாளி நசீர் ஹமீது, தற்போது இந்தியாவில் பதுங்கியிருக்கலாம் என அமெரிக்கப் புலனாய்வு அமைப்பிற்குத் துப்பு கிடைத்ததை அடுத்து, அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்குத் தப்பி வந்து பதுங்கி இருக்கும் குற்றவாளி நசீர் ஹமீது குறித்து உறுதியான தகவலைக் கொடுப்பவர்களுக்கு ரூ. 45 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. தனது மனைவி மற்றும் மகனைக் கொன்றுவிட்டுத் தலைமறைவான இந்தச் சம்பவத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் FBI தீவிரம் காட்டி வருகிறது. சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியைக் கண்டறிய உதவும் முக்கியத் தகவலுக்காகவே இந்த பெரிய தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.