டெல்லியைச் சேர்ந்த லச்சி ராம் (42) மற்றும் அவரது மனைவி குசும் லதா (38) ஆகியோர், டெல்லி-மும்பை விரைவுச் சாலைக்கு அருகில் உள்ள நூஹ் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் முழுவதும் உருக்குலைந்த காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் வியாழக்கிழமை அன்று வெளிச்சத்துக்கு வந்தது. அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று இவர்களின் காரை மோதிச் நொறுக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் நள்ளிரவுக்குள்பநூஹ் அருகே உள்ள நோசேரா கிராமத்தில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. நள்ளிரவு முழுவதும் பலர் விபத்துக்குள்ளான வாகனத்தைக் கடந்து சென்றிருந்தும், யாரும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்த முதல் தகவல், புதன்கிழமை அன்று காலை 7.30 மணிக்குத்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், உருக்குலைந்த காருக்குள் சிக்கியிருந்த தம்பதியைக் கண்டனர். உடல்கள் இருந்த நிலையைக் கொண்டு பார்க்கையில், மோதலுக்குப் பின்னரும் அவர்கள் பல மணி நேரம் உயிருடன் இருந்திருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.
கணவர் தனது இறுதி தருணங்களில் மனைவியைக் கை நீட்டிப் பிடித்து இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தம்பதியினர், ராஜஸ்தானின் கரௌலியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு சிறுவயதுக் குழந்தைகள் உள்ளனர். கணவர் கட்டுமான ஒப்பந்ததாரராகப் பணிபுரிந்துள்ளார்.
வேகன்-ஆர் ரக கார் அதிவேகத்தில் வந்த கனரக வாகனம் மோதியதால், கார் உருக்குலைந்து, பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதிச் சிதைந்துள்ளது. தீவிர காயம் அடைந்த தம்பதியினர் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தனர். விபத்துக்குப் பின் இவ்வளவு நேரம் பரபரப்பான விரைவுச் சாலையில் கார் கவனிக்கப்படாமல் இருந்தது எப்படி என்று தெரியவில்லை என்றும், காவல் ரோந்து பணியில் அலட்சியம் இருந்ததா என்றும் மேல் விசாரணைக்கு பின்னரே தெரியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.