சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒரு பெண், தொழிற்சாலையில் வேலை செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் அவரது இடது காது முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், உடனடியாகக் காதைத் தலையில் இணைக்க முடியவில்லை. அப்போது, துண்டிக்கப்பட்ட காதை வீணாக்க விரும்பாத மருத்துவர்கள், ஒரு நூதனமானத் திட்டத்தைச் செயல்படுத்தினர்.
அவர்கள் துண்டிக்கப்பட்ட காதில் இரத்த ஓட்டத்தைத் தொடர்ந்து பராமரிக்கும் நோக்கில், ஒரு அறுவை சிகிச்சை மூலம் அதைத் தற்காலிகமாக அந்தப் பெண்ணின் காலின் மேல் பகுதியில் இணைத்தனர்.
இரத்தம் சிறப்பாகப் பாயும் பகுதியாகக் காலின் மேல் பகுதியைத் தேர்ந்தெடுத்து, சுமார் 10 மணி நேரம் நடந்த நுணுக்கமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, காது காலில் இணைக்கப்பட்டது.
இது “ஹெட்டரோடோபிக் சர்வைவல்” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்புத் தொழில்நுட்பமாகும். சுமார் 5 மாதங்கள் வரை அந்தப் பெண் அந்தப் பாதுகாப்புக்காகக் காலில் காதுடன் தளர்வானச் செருப்புகளை அணிந்து வந்தார்.
அதன் பிறகு, மருத்துவர்கள் இரண்டாவது கடினமான அறுவை சிகிச்சை மூலம், காதைத் திரும்பவும் அதன் உண்மையான இடத்தில் வெற்றிகரமாகப் பொருத்தினர். துண்டிக்கப்பட்ட உறுப்புகளை உடனடியாகச் சரிசெய்ய முடியாத சமயங்களில், இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.