விந்தணு தானத்தில் ஒருவருக்கே நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பது ஏன்?
BBC Tamil December 15, 2025 11:48 AM
Getty Images

சில ஆண்கள் விந்தணு தானம் மூலம் மிகப்பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்குத் தந்தையாகி வருகின்றனர். இந்த வாரம், ஒருவரின் விந்தணுவில் சந்ததிக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் மரபணுப் பிறழ்வு இருந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டது.

இந்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, அந்த நபரின் விந்தணு 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, குறைந்தது 197 குழந்தைகளைப் பெற உதவியுள்ளது. இந்த வெளிப்பாடு, விந்தணு தான தொழிலின் வீச்சு குறித்த ஒரு அரிய புரிதலை வழங்கியது.

ஒரு பெண்ணின் துணைவர் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் போது, அல்லது தன்பாலின உறவில் இருப்பவர்கள் அல்லது தனியாக குழந்தை பெற்று வளர்க்கும் போது, விந்தணு தானம் அவர்கள் தாய்மையடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் இந்தச் சந்தையின் மதிப்பு 2033ஆம் ஆண்டுக்குள் 2 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டென்மார்க் விந்தணுவின் ஒரு பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது.

அப்படியானால், ஏன் சில விந்தணு தானம் செய்பவர்கள் இவ்வளவு அதிகமான குழந்தைகளுக்குத் தந்தையாகின்றனர், டென்மார்க் விந்தணு அல்லது "வைக்கிங் விந்தணு" ஏன் இவ்வளவு பிரபலமானது, இந்தத் துறைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா?

பெரும்பாலான ஆண்களின் விந்தணு போதுமானதாக இல்லை

இதைப் படிக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்கு வருத்தம் அளிக்கும் செய்தி இதுதான்: உங்கள் விந்தணுவின் தரம் தானம் செய்யப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்—தன்னார்வலர்களில் நூற்றில் ஐந்துக்கும் குறைவானவர்களே அந்த தகுதியைப் பெறுகிறார்கள்.

முதலில், ஒரு மாதிரியில் போதுமான விந்தணுவை நீங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்—அதுதான் உங்கள் விந்தணு எண்ணிக்கை—அதன்பின் அவை எவ்வளவு நன்றாக நீந்துகின்றன—அதாவது அவற்றின் இயக்கம்—மற்றும் அவற்றின் வடிவம் ஆகியவற்றின் சோதனைகளில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

விந்தணு வங்கியில் உறைய வைத்து சேமித்த பின்னரும் அது பிழைத்திருக்கும் என்பதை உறுதி செய்ய விந்தணு சோதிக்கப்படுகிறது.

நீங்கள் சிறந்த கருவுறச்செய்யும் திறன் கொண்டவராக இருக்கலாம், ஆறு குழந்தைகளைப் பெற்றிருக்கலாம், ஆனாலும் தானம் செய்யப் பொருத்தமற்றவராக இருக்கலாம்.

Getty Images

விதிகள் உலகம் முழுவதும் வேறுபடுகின்றன, ஆனால் பிரிட்டனில் நீங்கள் ஒப்பீட்டளவில் இளமையாக இருக்க வேண்டும்—அதாவது 18-45 வயதுக்குள் இருக்கவேண்டும்; ஹெச்ஐவி மற்றும் கொனோரியா போன்ற தொற்றுகள் இல்லாதவராகவும், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், முதுகெலும்பு தசைநார் சிதைவு மற்றும் சிக்கிள் செல் நோய் போன்ற மரபணு நிலைகளை ஏற்படுத்தும் மாற்றங்களைக் கடத்துபவராக இருக்கக்கூடாது.

மொத்தத்தில், விந்தணு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பிரிட்டனில் தேவைப்படும் விந்தணுவில் பாதி இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால், உயிரியல் ரீதியாக ஒரு சில தானம் செய்பவர்களால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற முடியும். ஒரு கருமுட்டையை கருத்தரிக்க செய்ய ஒரு விந்தணு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விந்து வெளியேற்றத்திலும் கோடிக்கணக்கான விந்தணுக்கள் உள்ளன.

ஆண்கள், தானம் செய்யும் காலத்தில், வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ, பல மாதங்களுக்கு கிளீனிக் செல்வார்கள்.

கருவுறுதல் மற்றும் மரபியல் துறையில் இயங்கும் பிராகரஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சாரா நோர்கிராஸ் கூறுகையில், விந்தணு தானம் செய்பவர்களின் பற்றாக்குறை அதை ஒரு "மதிப்பு மிக்க ஒன்றாக" மாற்றுகிறது என்றும், "விந்தணு வங்கிகளும் கருத்தரிப்பு நிலையங்களும் தேவையை பூர்த்தி செய்ய, தங்களிடம் உள்ள விந்தணு தானம் செய்யும் நபர்களையே அதிகம் பயன்படுத்துகின்றன" என்றும் கூறினார்.

அதிக பிரபலமடையும் சில விந்தணுக்கள் Allan Pacey பேராசிரியர் ஆலன் பேசி

இந்த விந்தணு தானம் செய்பவர்களின் தொகுப்பில், சில ஆண்களின் விந்தணு மற்றவர்களை விடப் பிரபலமாக உள்ளது.

தானம் செய்பவர்கள் கண்மூடித்தனமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. சில ஆண்களுக்கு மற்றவர்களை விடப் பல மடங்கு 'தெரிவுகள்' கிடைக்கும் டேட்டிங் ஆப்ஸ்களின் கடுமையான யதார்த்தத்தைப் போன்ற ஒரு செயல்முறை இது.

விந்தணு வங்கியைப் பொறுத்து, நீங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம், அவர்களின் குரலைக் கேட்கலாம், அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்—பொறியாளரா அல்லது கலைஞரா—மற்றும் அவர்களின் உயரம், எடை போன்றவற்றைச் சரிபார்க்கலாம்.

"அவர்கள் ஸ்வென் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பொன்னிற முடி உள்ளது, அவர்கள் 6 அடி 4 அங்குலம் (1.93 மீட்டர்) உயரம், விளையாட்டு வீரர், பிடில் வாசிப்பவர் மற்றும் ஏழு மொழிகள் பேசக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரிந்தால்—அது உங்களைப் போன்ற தோற்றம் கொண்ட தானம் செய்பவரை விட மிகவும் கவர்ச்சிகரமானது என்பது உங்களுக்கே தெரியும்," என்று விந்தணு வங்கியை நடத்தி வந்த ஆண் கருவுறுதல் நிபுணர் பேராசிரியர் ஆலன் பேசி கூறுகிறார்.

"இறுதியில், தானம் செய்பவரைத் தேர்ந்தெடுக்கும் போது மக்கள் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் நகர்த்துகிறார்கள் (swiping)."

வைக்கிங் விந்தணு உலகை எப்படி ஆக்கிரமித்தது? Getty Images டென்மார்க் உலகளாவிய விந்தணு ஏற்றுமதியாளராக மாறியுள்ளது (படத்தில் இருப்பவர் தானம் செய்பவர் அல்ல)

டென்மார்க் உலகின் மிகப்பெரிய விந்தணு வங்கிகளில் சிலவற்றின் தாயகமாக உள்ளது. அது "வைக்கிங் குழந்தைகளை" உருவாக்குவதில் நற்பெயரைப் பெற்றுள்ளது.

ஒரு 0.5 மில்லி விந்தணு குப்பியின் விலை 100 யூரோ (88 பவுண்டு) முதல் 1000 யூரோ (880 பவுண்டு) வரை உள்ள கிரையோஸ் இண்டர்நேஷனல் விந்தணு வங்கியின் 71 வயதான நிறுவனர் ஓலே ஸ்கோ, டென்மார்க்கில் விந்தணு தானம் தொடர்பான கலாசாரம் மற்ற நாடுகளை விட மிகவும் வித்தியாசமானது என்று கூறுகிறார்.

"இங்குள்ள மக்கள் ஒரு பெரிய குடும்பத்தைப் போல இருக்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார், "இந்த விஷயத்தில் குறைவான சமூக கட்டுப்பாடுகளே உள்ளன. நாங்கள் தியாக மனப்பான்மை கொண்ட மக்கள். விந்தணு தானம் செய்யும் பலரும் ரத்த தானமும் செய்கிறார்கள்."

அதுவே, அந்த நாட்டை "விந்தணுவை ஏற்றுமதி செய்யும் வெகு சில நாடுகளில்" ஒன்றாக மாற்றியுள்ளது என்று ஸ்கோ வாதிடுகிறார்.

ஆனால் டென்மார்க்கிய விந்தணு மரபியல் காரணமாகவும் அது பிரபலமாக உள்ளது என்று அவர் வாதிடுகிறார். டென்மார்க்கை சேர்ந்தவர்களின் "நீலக் கண் மற்றும் பொன்னிற முடி மரபணுக்கள்" ஒடுங்கிய பண்புகள் கொண்டவை, அதாவது ஒரு குழந்தைக்கு இந்த பண்புகள் தோன்ற அவை இரண்டு பெற்றோரிடமிருந்தும் வர வேண்டும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதன் விளைவாக, தாயின் பண்புகள், அதாவது கருமையான முடி, "பிறக்கும் குழந்தையிடம் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கலாம்," என்று ஸ்கோ விளக்குகிறார்.

விந்தணு தானத்திற்கான தேவை முக்கியமாக "வயதளவில் 30களிலுள்ள, அதிகம் படித்த தனியாக வாழும் பெண்களிடமிருந்து" வருகிறது என்று அவர் கூறுகிறார். விந்தணு தானம் கோருபவர்களில் இத்தகைய பெண்கள் 60 சதவிகிதமாக உள்ளனர்.

எல்லை கடக்கும் விந்தணு

இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட விந்தணு தானம் குறித்த ஆய்வின் ஒரு அம்சம், ஒருவரின் விந்தணு டென்மார்க்கில் உள்ள ஐரோப்பிய விந்தணு வங்கியில் சேகரிக்கப்பட்டு, பின்னர் 14 நாடுகளில் உள்ள 67 கருத்தரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது என்பதாகும்.

ஒருவரின் விந்தணு எத்தனை முறை பயன்படுத்தப்படலாம் என்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட விதிகள் உள்ளன. சிலவற்றில் இது மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. வேறு சிலவற்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களையே தாயாக்கும் வகையில் வரம்பு விதிக்கின்றன (ஒவ்வொரு குடும்பமும் எத்தனை தொடர்புடைய குழந்தைகளைப் பெற விரும்புகிறதோ, அத்தனை பெறலாம்).

தாங்கள் உறவினர்கள் என்று தெரியாத சகோதர, சகோதரிகளை (half siblings) சந்தித்து, உறவை ஏற்படுத்தி, குழந்தைகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த வரம்பு என்பதே முதல் வாதமாக இருந்தது.

இவ்வாறான விதிகள் வரும் வரை, இத்தாலி, ஸ்பெயின் அதன் பிறகு நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஒரே ஆணின் விந்தணு பயன்படுத்தப்படுவதை தடுக்க எந்த கட்டுப்பாடும் இல்லை.

இது ஒரு விந்தணு தானம் செய்பவர் சட்டபூர்வமாக அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்குத் தந்தையாகும் நிலையை உருவாக்குகிறது. இருப்பினும், அந்த நபருக்குத் தனது விந்தணு இவ்வளவு பரந்த அளவில் பயன்படுத்தப்படுவதைப் பற்றி பெரும்பாலும் தெரியாது.

"விந்தணு தானம் பெறுபவரும் மற்றும் தானம் செய்பவரும், ஒருவரின் விந்தணு பல நாடுகளில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை அறிந்திருக்கவில்லை—இந்த உண்மை தெளிவாக விளக்கப்பட வேண்டும்," என்று சாரா நோர்கிராஸ் கூறுகிறார். விந்தணு தானம் செய்பவர் பெறக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது "விவேகமானதாக" இருக்கும் என்று வாதிடுகிறார்.

Getty Images தேவைப்படும் வரை விந்தணு உறைநிலையில் வைக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு மரபணுவைக் கடத்திய ஒரு விந்தணு தானம் செய்பவர் குறித்த விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஆணையம் எல்லைகள் கடந்து பயணிக்கும் விந்தணுவைக் கண்காணிக்க ஐரோப்பா முழுமைக்கான, 'விந்தணு தானம் செய்பவர்களின் பதிவேட்டை' உருவாக்க பெல்ஜிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

துணைப் பிரதமர் ஃபிராங்க் வாண்டென்புரூக், "மக்களுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கும் ஆரம்ப நோக்கம் ஒரு உண்மையான கருத்தரிப்பு வணிகத்திற்கு வழிவகுத்துள்ளது" என்றும் கூறினார்.

விந்தணு தானம் செய்யும் நபர் ஒருவருக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 50 குடும்பங்கள் என்ற வரம்பை மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியலுக்கான ஐரோப்பிய சங்கம் (European Society of Human Reproduction and Embryology) முன்மொழிந்துள்ளது. அந்த நிலையிலும் கூட, ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்பினால் ஒரு தானம் செய்பவரின் விந்தணு மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற முடியும்.

Getty Images

விந்தணு தானம் மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. சிலர் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்கள் தானம் செய்யப்பட்ட விந்தணுவால் உருவாக்கப்பட்டதையும், நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளில் ஒருவர் என்பதை அறிவதன் மூலமாக ஆழமாக மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

அதே நிலை தானம் செய்பவர்களுக்கும் பொருந்தும். தங்கள் விந்தணு இவ்வளவு பரந்த அளவில் விநியோகிக்கப்படுகிறது என்பதை அவர்கள் பெரும்பாலும் அறியாமல் இருக்கிறார்கள்.

எளிதில் கிடைக்கும் டிஎன்ஏ சோதனைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தங்கள் குழந்தைகள், சகோதர சகோதரிகள் அல்லது தானம் செய்பவரைத் தேட முடியும் என்பதால் இந்த அபாயங்கள் அதிகரிக்கின்றன. பிரிட்டனில் விந்தணு தானம் செய்பவர்களின் அடையாளங்கள் இனியும் ரகசியமாக இருக்கப் போவதில்லை. அத்துடன், குழந்தைகள் தங்கள் உயிரியல் தந்தையின் அடையாளத்தை அறிவதற்கான ஒரு அதிகாரப்பூர்வ செயல்முறை உள்ளது.

கிரையோஸில் இருக்கும் ஸ்கோ கூறுகையில், விந்தணு தானத்தின் மீது மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குடும்பங்களை "தனியார் மற்றும் முற்றிலும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தையை" நோக்கித் திருப்புவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று வாதிடுகிறார்.

லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நெறிமுறையாளர் மருத்துவர் ஜான் ஆப்பிள்பி, விந்தணுவை இவ்வளவு பரந்த அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் ஒரு "மிகப்பெரிய" நெறிமுறைச் சிக்கல் நிறைந்த பகுதி என்று கூறினார்.

அடையாளம், தனியுரிமை, ஒப்புதல், கண்ணியம் மற்றும் பல விஷயங்களில் சிக்கல்கள் உள்ளன என்றும் போட்டியிடும் தேவைகளுக்கு இடையில் இது ஒரு "சமநிலைப்படுத்தும் செயல்" ஆகும் என்று அவர் கூறினார்.

மருத்துவர் ஆப்பிள்பி, "ஒரு தானம் செய்பவர் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறார் என்பதைக் கட்டுப்படுத்துவது கருவுறுதல் தொழில்துறையின் பொறுப்பு" என்று கூறினார், ஆனால் உலகளாவிய விதிமுறைகளை ஒப்புக்கொள்வது "மிகவும் கடினம்" என்பதை மறுக்க முடியாது என அவர் மேலும் கூறினார்.

முன்மொழியப்பட்ட உலகளாவிய விந்தணு தானம் செய்பவர் பதிவேடு, அதன் சொந்த "நெறிமுறை மற்றும் சட்ட சவால்களுடன்" வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.