தென் ஆப்ரிக்காவை இந்தியா எளிதில் வெற்றி கொள்ள உதவிய 'அர்ஷ்தீப் சிங் எழுச்சி'
BBC Tamil December 15, 2025 12:48 PM
Getty Images

"ஒருசில நாட்கள் உங்களின் திட்டத்தை உங்களால் சரியாக செயல்படுத்த முடியாமல் போகலாம். கடந்த போட்டியில் அதுதான் நடந்தது. இன்று அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றியதால், அனைத்தும் நன்றாக அமைந்தது"

நேற்று (டிசம்பர் 14) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கூறிய வார்த்தைகள் இவை.

டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த இரண்டாவது டி20 போட்டி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏமாற்றம் அளித்தது. அவரால் தன் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. வைட் யார்க்கர்கள் வீசவேண்டும் என்ற திட்டம் சற்று தவற, அவர் வீசிய யார்க்கர்கள் நடுவர்களால் 'வைட்' என்று அறிவிக்கப்பட்டன. அதுவும் ஒரே ஓவரில் 7 வைட்கள் வீசியிருந்தார் அவர்.

அந்த ஓவரின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

அன்று, நியூ சண்டிகரில் வீசிய 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் அர்ஷ்தீப். அதுவே தென்னாப்பிரிக்கா 200 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. அவர் ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஐம்பது ரன்களுக்கு மேல் கொடுத்தது மூன்றாவது முறையாக அமைந்தது. மற்ற இரண்டு தருணங்களில் விக்கெட்டாவது எடுத்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் அதுவும் கிடைக்கவில்லை.

அர்ஷ்தீப் சிங்கிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் அது மோசமான ஒரு செயல்பாடாக அமைந்தது.

3 நாட்கள் & சுமார் 230 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு... மூன்றாவது டி20 போட்டிக்காக தரம்சாலாவில் களம் கண்டது இந்திய அணி. சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சு யூனிட்டின் தலைவர் என்ற பொறுப்போடு அர்ஷ்தீப் களமிறங்க வேண்டியிருந்தது.

ஆனால், அந்தப் பொறுப்புகளை நன்றாக சுமந்து, முந்தைய போட்டியின் செயல்பாட்டை முற்றிலும் மறந்து, சிறப்பாகப் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் ஆனார்.

4 ஓவர்களில் அவர் விட்டுக்கொடுத்தது வெறும் 13 ரன்களே. 14 பந்துகளை 'டாட் பால்'களாக வீசினார். முக்கிய கட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார்.

முதல் ஓவரிலேயே தாக்கம் ஏற்படுத்தினார்

வழக்கமாக தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்புக் கொடுக்கும். அந்த மைதானத்தில் பொதுவாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆகும். அதனால் அவர்கள் இங்கு பந்துவீச விரும்புவார்கள். ஆனால், போட்டிக்கு முன்பு 'பிட்ச் ரிப்போர்ட் செய்திருந்த ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமானா போமி எம்பாங்வா, இந்தப் போட்டியில் பௌலர்களுக்கு பெரும் சவால் இருக்கும் என்று சொல்லியிருந்தார்.

"போட்டி தொடங்குவதற்கு முன்பே பனி பொழியத் தொடங்கிவிட்டது. சிறு புற்கள் ஆடுகளத்தில் பரவியிருக்கின்றன. இது நீங்கள் பந்துவீச்சாளராக இருக்கவேண்டாம் என்று நினைக்கக்கூடிய ஒரு ஆடுகளமாகத் தெரிகிறது. இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. பௌலர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும். பேட்டர்கள் ஆரம்பத்தில் சற்று கணித்துவிட்டு அதன்பின்னர் அடித்து ஆடலாம்" என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் கூறியிருந்தார்.

டாஸின்போது தனது அணி முதலில் பேட்டிங் செய்வது பற்றிப் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், "முதலில் பேட்டிங் செய்வதால், ஒருசில ஓவர்களுக்கு ஆடுகளத்தைக் கணிக்க வேண்டும். இன்று நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அவர்கள் சொன்னதுபோல் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் சிங் கொடுக்கவேயில்லை.

அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் குயின்டன் டி காக் சிங்கிள் எடுக்க, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஸ்டிரைக்குக்கு வந்தார். அவர் சந்தித்த முதல் பந்து (ஓவரின் இரண்டாவது பந்து), நன்கு அவுட்ஸ்விங் ஆனது. அடுத்த பந்து, 'ஓவர் தி ஸ்டம்ப்' வந்து அர்ஷ்தீப் வீசிய கோணத்திலேயே (with the angle) பேட்டருக்கு வெளியே சென்றது.

இரண்டு பந்துகள் அடுத்தடுத்து வெளியே சென்றிருக்க, ஓவரின் நான்காவது பந்தை உள்ளே திருப்பி ஹெண்ட்ரிக்ஸுக்கு அதிர்ச்சியளித்தார் அர்ஷ்தீப். நல்ல லென்த்தில், முதலிரு பந்துகளைப் போல் இந்த பந்தும் மிடில்-லெக் ஸ்டம்ப் லைனில் தான் பந்து பிட்ச் ஆனது. அதனால், அதேபோல் வெளியே செல்லும் என்று நினைத்து ஹெண்ட்ரிக்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால், இம்முறை பந்தை அர்ஷ்தீப் இன்ஸ்விங் செய்ய, எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார் அந்த தென்னாப்பிரிக்க ஓப்பனர். நான்காவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

எம்பாங்வா சொன்னதுபோல் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்காமல் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் விக்கெட்டை வீழ்த்தியது தென்னாப்பிரிக்காவை பின்தங்கச் செய்தது. மார்க்ரம் எதிர்பார்த்த அந்த நல்ல தொடக்கம் அந்த அணிக்குக் கிடைக்க அவர் விடவில்லை.

Getty Images தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் ஆடுகளத்தைக் கணிப்பதற்கான அவகாசத்தை அர்ஷ்தீப் வழங்கவில்லை சிக்கனமான பவர்பிளே ஸ்பெல் & சிறப்பான டெத் ஓவர்

தன் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அர்ஷ்தீப், பவர்பிளேவில் வீசிய 3 ஓவர்களிலும் சேர்த்தே 9 ரன்கள் தான் கொடுத்தார். மறுபக்கம் ஹர்ஷித் ராணாவும் சிறப்பாகச் செயல்பட்டதால் (பவர்பிளேவில் 2 விக்கெட்டுகள்) தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் 25/3 என தடுமாறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியால் இந்தப் போட்டியில் மீண்டு வர முடியவில்லை. ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் என பந்துவீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இருந்தாலும், ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், கடைசி கட்டத்தில் அதிரடியை கையில் எடுத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினார் மார்க்ரம். அதனால், அந்த ஓவரில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு 19 ரன்கள் வந்தன. அவர் அரைசதம் கடக்க, அந்த அணியும் 100 ரன்களைக் கடந்தது. கடைசி 2 ஓவர்களிலும் அதே அதிரடியைத் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா 140 என்ற ஸ்கோரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மார்க்ரம் நன்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 19வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப். இப்போதும் நியூ சண்டிகரில் முயற்சி செய்ததைத்தான் முயற்சித்தார் - வைட் யார்க்கர்கள். ஆனால், கடந்த ஆட்டத்துக்கு மாறாக இம்முறை பந்துகள் யார்க்கர்களாக தவறிவிட்டாலும் அவற்றின் லைன் தவறவில்லை. பந்து பேட்டருக்கு வெளியே சென்றாலும், வைடாகவில்லை.

அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த மார்க்ரம், மீண்டும் மூன்றாவது பந்தில் ஸ்டிரைக்குக்கு வந்தார். அர்ஷ்தீப் அவருடைய கோணத்தோடு வெளியே வீசிய பந்தை மார்க்ரம் பலமாக அடிக்க முற்பட, பந்து எட்ஜ் ஆகி கீப்பர் ஜித்தேஷ் சர்மாவின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. அதனால், மார்க்ரமின் இன்னிங்ஸும், சற்றே சவாலான ஸ்கோர் அடிக்கலாம் என்ற தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தன.

Getty Images மூன்றாவது டி20 போட்டியின் பவர்பிளேவில் 18 பந்துகள் வீசிய அர்ஷ்தீப் வீசிய 18 அதில் 12 பந்துகளை டாட் பால்களாக வீசினார்

மார்க்ரம் அவுட் ஆனதால், அடுத்த 9 பந்துகளில் தென்னாப்பிரிக்காவால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால், அந்த அணியின் இன்னிங்ஸ் 117 ரன்களில் முடிந்தது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா வழக்கமான அதிரடி தொடக்கம் (18 பந்துகளில் 35 ரன்கள்) கொடுக்க, சேஸ் செய்வது ஓரளவு எளிதானது. 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா இந்தப் போட்டியை வென்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலையும் பெற்றிருக்கிறது.

மூன்று இந்திய பௌலர்கள் (அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, வருண்) தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தாலும், ஆட்டத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்திய அர்ஷ்தீப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஒரு ஏமாற்றமான செயலபாட்டுக்குப் பிறகு சிறப்பான முறையில் எழுச்சி கண்டு இந்தியாவையும் வெற்றி பெறவைத்துவிட்டார் அர்ஷ்தீப் சிங்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.