கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறியுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் பீட்டாவோல்ட் நியூ எனர்ஜி டெக்னாலஜி என்ற நிறுவனம் நாணயம் அளவிலான, சுற்றுச்சூழலுக்கு உகந்த அணு பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘பிவி100’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேட்டரியின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 50 ஆண்டுகள் வரை இது செயல்படக்கூடியது என்பதாகும்.
இது சீன தொழில்நுட்பத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தற்போது நூறு மைக்ரோவாட் ஆற்றலை மட்டுமே வெளியிடுவதால், இந்த பேட்டரியால் ஸ்மார்ட்போன்கள் அல்லது கேமராக்களை சார்ஜ் செய்ய முடியாது.
இருப்பினும், இது வெறும் ஆய்வக கண்டுபிடிப்பு மட்டும் அல்ல, நீண்ட காலம் மற்றும் நம்பகமான ஆற்றல் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக இந்த பேட்டரியின் பெருமளவிலான உற்பத்தியை அந்நிறுவனம் தொடங்கிவிட்டது.
இந்த பிவி100 பேட்டரியானது நிக்கல்-63 என்ற கதிரியக்கப் பொருளைப் பயன்படுத்தி இயங்குகிறது. இந்த நிக்கல்-63 காலப்போக்கில் மெதுவாக தாமிரமாக சிதையும்போது, அதிலிருந்து பீட்டா துகள்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் துகள்களை சீனாவின் நான்காம் தலைமுறை வைர அரைக்கடத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றுகிறது.
வழக்கமான லித்தியம் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது, இந்த பிவி100 பேட்டரி நூறு மடங்கு அதிக ஆற்றலைச் சேமிக்கும் திறன் கொண்டது. மேலும், இது மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் முதல் 120 டிகிரி செல்சியஸ் வரையிலான மிகக் கடுமையான வெப்பநிலையிலும் செயல்படும். இதை மறுசுழற்சி செய்யத் தேவையில்லை, ஏனெனில் இது இயற்கையாகவே தாமிரமாக மாறிவிடும்.
மேலும், தீப்பிடித்தல் அல்லது வெடித்தல் போன்ற அபாயங்களை இது ஏற்படுத்தாது என்றும், பராமரிப்பு தேவையில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு வாட் திறன் கொண்ட கூடுதல் சக்தி வாய்ந்த பேட்டரியை வெளியிடவும் பீட்டாவோல்ட் திட்டமிட்டுள்ளது. விண்வெளிப் பயணங்கள், செயற்கைக்கோள்கள், இதயச் சீராக்கிகள் போன்ற மருத்துவ சாதனங்கள் மற்றும் நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்த இந்தத் தொழில்நுட்பம் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.