Getty Images
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் 2 பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்10 வயது சிறுமி உள்பட 15 பேர் உயிரிழந்தனர். ஹனுக்கா எனும் யூத பண்டிகை கொண்டாட்டத்தின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார். காயமடைந்த இளம் வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை - மகன் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த தாக்குதல் குறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் லேன்யன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆணையர் லேன்யன், தன்னால் அதிக விவரங்களைத் தர முடியாது என்றார். ஆனால் தந்தை-மகன் இருவருக்கும் "ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாகத் தொடர்பு உள்ளது" என்றும், தந்தை 2015 முதல் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Getty Images
"இருவரின் பின்னணி குறித்து [காவல்துறை] இன்னும் விசாரித்து வருகிறது. தற்போதைய நிலையில் அவர்களைப் பற்றி எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும்," என்றார் லேன்யன்.
தாக்குதல் நடத்திய இருவரும் ஆஸ்திரேலிய குடிமக்களா என்று கேட்டபோது, அவர், "அது குறித்து கருத்து தெரிவிக்க தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் 50 வயது நபர் ஒரு துப்பாக்கி கிளப்பில் உறுப்பினராக இருந்தார். சட்டப்படி துப்பாக்கி உரிமம் பெற அவருக்கு உரிமை இருந்தது. அந்த நபரிடம் ஏபி வகை உரிமம் இருந்தது, அது அவர் பயன்படுத்திய நீண்ட துப்பாக்கிகளை வைத்திருக்க உரிமை அளித்தது. துப்பாக்கி உரிமத்தைப் பொறுத்தவரை, ஒரு நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கத் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த, துப்பாக்கிப் பதிவகம் அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக ஆய்வு செய்கிறது" என்று லேன்யன் தெரிவித்தார்.
"மிக முக்கியமாக, தற்போது 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவரது உடல் நிலையின் அடிப்படையில், அந்த நபர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது." என்று அவர் கூறினார்.
நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லேன்யனின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய கிழக்கு பகல் நேரப்படி மாலை 6:47 மணியளவில் போண்டி கடற்கரையில் உள்ள ஆர்ச்சர் பூங்கா அருகே நிகழ்ந்தது.
பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் போண்டி கடற்கரையின் வடக்குப் பகுதியில் உள்ள நெரிசலான இடத்தில் நடந்தது.
"கடற்கரைக்குப் பின்னாலுள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஒரு ஹனுக்கா என்ற யூதர்களின் பண்டிகைக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. கடற்கரைக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு நடைபாதை இருந்தது. துப்பாக்கிதாரிகள் அதை இலக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
"துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு நான் அந்தப் பாலத்தைக் கடந்தபோது அங்கு குறைந்தது 200 பேர் இருப்பதையும், இசை உரக்க ஒலித்துக்கொண்டு இருந்ததையும், பல்வேறு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் இந்த உயரமான பகுதியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது" என்று டெஸ்ஸா வோங் கூறினார்.
"நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான வாயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகக் குறைவாகவே இருந்தன" என்று அவர் கூறுகிறார்.
"இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது," என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.
யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லேன்யன் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி இந்தச் சம்பவத்தை "அதிர்ச்சியூட்டுவது, ஆழ்ந்த கவலையளிப்பது" என்று விவரித்தார்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்களுடைய காயங்களின் அளவு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை.
நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தற்போது அந்தப் பகுதியில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்வததைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யூத விடுமுறை நாளான கடற்கரையில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகையுடன் தொடர்புடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
BBC ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி, போண்டி கடற்கரை தாக்குதல் யூத எதிர்ப்பு வெறுப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளார் நேரில் கண்ட சாட்சிகள் சொன்னது என்ன?
துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது தனது குழந்தைகளுடன் கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தான் தனது குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார். "நான் வழக்கமாக வேலைக்குப் பிறகு செய்வது போல் இன்று மதியம் கடற்கரையில் இருந்தேன், அப்போது தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டேன். சுமார் 20 பேர் இருந்ததாக நினைக்கிறேன்."
"ஆரம்பத்தில் வெடிச்சத்தங்களை யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. பட்டாசுகள் வெடிப்பது போலத் தோன்றியது. ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு வடக்கே உள்ள தமராமா, போண்டி ஆகிய இரண்டு கடற்கரைகள் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின," என்று அவர் கூறினார்.
சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு சாட்சியான மார்கோஸ் கார்வால்ஹோ, "துப்பாக்கிச் சத்தம் பட்டாசு சத்தம் போல் இருந்தது. போண்டியில் இப்படியொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார்.
"கடற்கரையில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது புரிந்தவுடன், ஓடத் தொடங்கினர். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வடக்கு போண்டியில் உள்ள புல்வெளியை நோக்கி ஓடினேன்."
பின்னர் தானும் வேறு சிலரும் ஒரு ஐஸ்கிரீம் வேனின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கார்வால்ஹோ கூறினார்.
அவசர சேவைகள் வந்து துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, கார்வால்ஹோ வீட்டிற்குச் செல்லும் வழியில், "தரையில் சடலங்கள் கிடப்பதை" கண்டதாகக் குறிப்பிட்டார்.
BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 'யூதர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்'
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், இது "யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் தனது எக்ஸ் பக்கத்தில், "சிட்னியில் உள்ள எங்கள் யூத சகோதர, சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்கள் முதல் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்."
"இந்த பயங்கரமான நேரத்தில் சிட்னியின் யூத சமூகம் மற்றும் முழு ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருக்காகப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
'யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல்'ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஆஸ்திரேலியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று விவரித்தார்.
அதுவொரு 'மகிழ்ச்சியான நாளாக' இருந்திருக்க வேண்டிய நாள் என்று அவர் கூறினார்.
"இது யூத-விரோத வெறுப்புச் செயல்" என்று கூறிய அல்பனீஸி ,"இது நமது நாட்டின் இதயத்தைத் தாக்கும் பயங்கரவாதத் தாக்குதல்" என்று தெரிவித்தார்.
Darrian Traynor/Getty Images சம்பவ இடத்தில் போலீசார் 'யூத உயிர்களைக் காப்பாற்ற வலுவான நடவடிக்கை எடுங்கள்'
இந்தத் தாக்குதலை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
"போண்டி கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. தீபத் திருவிழாவான ஹனுக்கா, இன்று நம்ப முடியாத அளவுக்கு இருள் சூழந்துள்ளது" என்று இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
"வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது போதாது. ஆஸ்திரேலிய அரசாங்கம் யூத எதிர்ப்பு வன்முறையில் இருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"தற்போது இஸ்ரேலில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மைமோன், இந்தப் பேரழிவு தரும் செய்தியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா திரும்புகிறார்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு