நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதை பாஜகவினர் விமர்சித்து வந்த நிலையில், அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மக்களவையில் அதிரடி காட்டி வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு எதிராக அவர் முன்வைத்த தர்க்கரீதியான வாதங்கள் ஆளுங்கட்சியை திணறடித்தன.
புதிய மசோதா கிராம சபைகளின் அதிகாரத்தை பறிப்பதோடு, ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமையை பலவீனப்படுத்துவதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பியபோது, பாஜகவினர் 'குடும்ப அரசியல்' குறித்து விமர்சித்தனர். அதற்கு, "காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர்; ஒட்டுமொத்த தேசமும் அப்படித்தான் உணர்கிறது" என சாதுர்யமாகப் பதிலடி கொடுத்தார்.
சபைக்குள்ளே காரசாரமாக பேசியதுடன், வெளியே மகாத்மா காந்தியின் படத்தை ஏந்தி போராட்டம் நடத்தி எதிர்க்கட்சிகளை முன்னின்று வழிநடத்தினார். எம்.பி-யாகி ஓராண்டே ஆன நிலையில், ராகுல் காந்தியின் இல்லாமையை தெரியாத அளவிற்கு தனது ஆளுமையால் காங்கிரஸின் முன்னணித் தலைவராக பிரியங்கா காந்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
Edited by Mahendran