FACEBOOK மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன. கூட்டணிக் கட்சிகள் இப்படிக் கோருவதற்குக் காரணம் என்ன?
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஒவ்வொரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதைவிட கூடுதல் இடங்களைத் தத்தம் கூட்டணியில் எதிர்பார்க்கின்றன. சில கட்சிகள் இதை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள் இந்த விருப்பத்தைப் பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் கூட்டணிகளில், கடந்த சட்டமன்றத் தேர்தலை வைத்துப் பார்த்தால், தி.மு.க. கூட்டணியில்தான் பெரும் எண்ணிக்கையிலான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
இவற்றில் ம.தி.மு.க, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, பி.வி. கதிரவன் தலைமையிலான அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.கே. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகியவை தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் புதிய கட்சி வரவுஇவை தவிர, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன.
கடந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணியோடு ஒப்பிட்டால், தற்போதும் தி.மு.க. கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் புதிதாக இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பது மட்டுமே ஒரு சிறிய மாற்றம்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு இடங்கள் ஏதும் அளிக்கப்படாமல், மாநிலங்களவையில் ஓரிடம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது அக்கட்சியும் சில இடங்களை எதிர்பார்க்கும்.
இந்த நிலையில்தான், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புகின்றன.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சில இடங்களைக் கூடுதலாகக் கொடுத்தாலும் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 188 இடங்களில் அந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் தி.மு.க. மட்டும் 173 இடங்களில் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா 6 இடங்களிலும் போட்டியிட்டன. ம.தி.மு.க. ஆறு இடங்களில் தி.மு.கவின் சின்னத்திலேயே போட்டியிட்டது.
இந்த நிலையில்தான் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள், கூடுதல் இடங்களை எதிர்பார்ப்பதாக வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம், தங்கள் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்தார். இதேபோன்ற குரல்கள் காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகளிலும் ஒலிக்கின்றன.
காங்கிரஸ் கூறுவது என்ன?தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு அடுத்தபடியாக கூடுதல் இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிதான்.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரசும் தி.மு.கவும் இணைந்தே போட்டியிட்டு வருகின்றன. ஆனால், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி தி.மு.க. கூட்டணியில் பெறும் இடங்கள் குறைந்து வருகின்றன.
திமுக கூட்டணியில், 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களைக் கைப்பற்றியது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்குப் பெரும் ஏமாற்றமளித்தன. தி.மு.க. கூட்டணி தோல்வியைத் தழுவ, காங்கிரஸ் கட்சியால் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் அக்கட்சி 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது, தி.மு.க. மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 18 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான், கடந்த முறை பெற்ற 25 இடங்களைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டுமென அக்கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கின்றன.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப் பெருந்தகை பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தத் தருணத்தில் இதுகுறித்து ஏதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இப்போது வரை துவங்கவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக தி.மு.க. விரைவில் குழு ஒன்றை அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரு வாரங்களில் அது நடக்கலாம். அதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தைகள் துவங்கும்" என்று மட்டும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தி.மு.கவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்குமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. "இப்போதே எவ்வளவு இடங்கள் என்று வெளியில் சொல்வது சரியாக இருக்காது" என்று மட்டும் தெரிவித்தார்.
விசிக கூறுவது என்ன?ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை கூட்டணியில் இரட்டை இலக்க இடங்களை எதிர்பார்ப்பதை வெளிப்படையாகவே கூறுகிறது.
"கடந்த 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்டோம். 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் முதலில் 11 இடங்கள் தருவதாகப் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது 10 இடங்களாகக் குறைக்கப்பட்டது. இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம். தி.மு.க. கூட்டணியில் முதன்முதலில் 8 தொகுதிகளைப் பெற்ற 2001ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெகுவாக வளர்ந்திருக்கிறது" என்கிறார், அக்கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
அதேபோல, வேறு சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
"கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகள் தலா ஆறு இடங்களைப் பெற்றன. ஆனால், வெற்றி விகிதத்தைப் பார்த்தால், இடதுசாரிக் கட்சிகள் தலா இரண்டு இடங்களில்தான் வென்றன. வி.சி.க. நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
இதற்குப் பிந்தைய சுமார் ஐந்து ஆண்டுகளிலும் எங்கள் செயல்பாடுகள் தீவிரமாக இருந்துள்ளன. கூட்டணி வைக்கும்போது வி.சி.க. தரப்பில் இருந்து கிடைக்கும் வாக்குகள் (Vote Transfer), கடந்த ஐந்தாண்டு காலச் செயல்பாடுகள் அனைத்தையும் மனதில் வைத்து, இந்த முறை இரட்டை இலக்கத்தில் இடங்களை எதிர்பார்க்கிறோம்" என்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
இடதுசாரி கட்சிகள் கூறுவது என்ன?இடதுசாரிக் கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கோரும் முடிவில்தான் உள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன், "கண்டிப்பாக கூடுதல் இடங்களைக் கோருவோம். அது இயல்பானதுதானே" என்று மட்டும் தெரிவித்தார்.
ஆனால், அது எத்தனை இடங்கள் என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. "இன்னும் அதற்கான காலம் வரவில்லை. தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு கட்சியில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்களைக் கேட்பது, எந்தெந்த இடங்களைக் கேட்பது என்பதையெல்லாம் அந்தக் குழுவே முடிவு செய்யும்" என்று மட்டும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கோரும் நிலையில் இருந்தாலும், இடங்களின் எண்ணிக்கையை வைத்து கூட்டணியை முடிவு செய்யப் போவதில்லை என்கிறது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, தேர்தலின்போது அளிக்கப்படும் இடங்களை வைத்து தேர்தல் அணுகுமுறையை முடிவு செய்வதில்லை. மதவாத சக்திகளை முறியடிக்க வேணடும். அதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. ஆகவே, அந்தக் கூட்டணியில் தொடர்கிறோம்.
எல்லா கட்சிகளுமே கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட அடுத்த தேர்தலில் கூடுதல் இடங்களில்தான் போட்டியிட விரும்புவார்கள். அப்படித்தான் நாங்களும். ஆனால், இடங்களை வைத்து கூட்டணியை முடிவு செய்வோம் என்பதில்லை" என்கிறார்.
கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்பதன் பின்னணிதி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் இடங்களைக் கோருவதை இருவிதமாகப் பார்க்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.
"முதலாவதாக, நிஜமாகவே கூடுதல் இடங்களை அவர்கள் பெற விரும்புகிறார்கள். இரண்டாவதாக, கூடுதல் இடங்கள் கிடைக்காவிட்டாலும் கடந்த முறை பெற்ற இடங்களையாவது அவர்கள் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்" என்கிறார் அவர்.
அவரைப் பொருத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறை கொடுத்த இடங்களைவிடக் குறைவான இடங்களையே தி.மு.க. அளிக்க விரும்புகிறது. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெறலாம் என்பதை இதற்குக் காரணமாக அக்கட்சி சொல்லக்கூடும் என்றார் மணி.
அதோடு, "மக்கள் நீதி மய்யம் தவிர, தே.மு.தி.கவும் இந்தக் கூட்டணிக்கு வரலாம். பா.ம.கவின் ஒரு பிரிவையும் கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. முயலும். அப்படியானால், குறைந்தது 15 முதல் 20 இடங்களை இந்தக் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆகவே, 'நாங்களும் சில இடங்களைக் குறைத்துக் கொள்ளப் போகிறோம். நீங்களும் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று தி.மு.க. சொல்லக்கூடும். அதைத் தவிர்க்கவே, கூடுதல் இடங்களை இப்போதே கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன" என்கிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 30 - 35 இடங்களையும் இடதுசாரிகள் 8 இடங்களையும் கோரலாம் என்கிறார் அவர். இருந்தாலும், கோரிய இடங்கள் கிடைக்காவிட்டால் இந்தக் கட்சிகள் வேறு கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
திமுகவுக்கு நெருக்கடியா?தி.மு.க.வை பொருத்தவரை இதுவொரு பிரச்னையே இல்லை என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.
"ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்பதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், வேறு சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்திய தேர்தல்களில் மாறாத கூட்டணியாக தி.மு.க. கூட்டணி அமைந்திருக்கிறது. அதற்கு முன்பாக அ.தி.மு.க - தி.மு.க. கூட்டணிகளுக்குள் இடமாறுதல்கள் இருக்கும்.
அம்மாதிரி தருணங்களில் முந்தைய கூட்டணியில் இருந்ததைவிட கூடுதல் இடங்களை புதிய கூட்டணியில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், தி.மு.க. கூட்டணியில் அப்படி மாற்றங்கள் ஏதுமில்லை. அடுத்ததாக, இந்தக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சித்தாந்த வலுவுள்ளவர்கள். ஆகவே இது பிரச்னையாகாது" என்கிறார் அவர்.
ஆனால், 'புதிதாக ஏதாவது சில கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், அந்தத் தருணத்தில் இடங்களை விட்டுத் தர வேண்டிய சூழல் உருவாகுமல்லவா?' எனக் கேட்டபோது, "அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அந்தக் கட்சிகளுக்கு அளிக்கும் இடங்கள் ஒன்றிரண்டு இடங்களாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம். ஆகவே, அப்போதும் கூட்டணியில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை" என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு