அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்களின் மனதை வெல்ல அரசியல் கட்சிகள் அதிரடி வாக்குறுதிகளை முன்வைப்பது வழக்கம்.
கடந்த தேர்தலில் மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை போன்ற வாக்குறுதிகளை அறிவித்து திமுக பெரும் கவனம் பெற்றது.

இந்நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக தலைமை முக்கிய முடிவெடுத்து, அதற்காக உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைமை பொறுப்பை கனிமொழி ஏற்றுள்ளார்.
இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டைன் ரவீந்திரன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி. சந்தானம், சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கைக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறை திமுக எந்த புதிய, வாக்குகளை கவரும் வாக்குறுதிகளை முன்வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.