தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி கணக்குகளை சரிசெய்யும் நோக்கில் பாஜக மேலிடம் தனது வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வரும் டிசம்பர் 22-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைப்பது மற்றும் பாமக-வில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் போன்ற சவால்களை கையாளவே அனுபவம் வாய்ந்த பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வரும் அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்னதாகவே, கூட்டணி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பியூஷ் கோயலின் இந்த வருகை தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran