கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஊழல் மற்றும் போதைப்பொருள் புகார்:
"தமிழகம் தற்போது ஊழல் மற்றும் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கும் மாநிலமாக மாறிவிட்டது. ஊழல் பணத்தில் சொத்து சேர்ப்பவர்கள் பாவிகள். ஸ்டாலின் அரசு பதவியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு ஆபத்தானது," என்று அவர் சாடினார்.
விவசாயம் மற்றும் நிர்வாகத் தோல்வி:
விவசாயிகளின் நெல்லைச் சரியான நேரத்தில் கொள்முதல் செய்யத் துப்பில்லாத அரசாக இது உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வழங்கிய ரூ. 300 கோடி என்னவானது என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் அரசு மழுப்புவதாகவும், தகுதியற்றவர்கள் கையில் ஆட்சி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு:
வடலூரில் வள்ளலார் பக்தர்கள் விருப்பத்திற்கு மாறாகச் சர்வதேச மையம் அமைப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடலூர் நொச்சிக்காட்டில் சிப்காட் அமைக்க விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனச் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஹெச். ராஜா உறுதியளித்தார்.
எதிர்வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்று அவர் தனது உரையில் அறைகூவல் விடுத்தார்.