ஹிமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டல்ஹவுசியில் இன்று காலை பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றிலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து பின்னோக்கித் தறிகெட்டு ஓடியது.
பேருந்து பின்னால் இருந்த ஆழமான பள்ளத்தை நோக்கிச் சென்றதால், உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அலறினர். உயிர் பிழைக்க வழி தெரியாமல் பெண் பயணிகள் உட்பட 7 பேர் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
இந்த அதிர்ச்சிகரமான விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பேருந்து பின்னோக்கிச் சென்று பள்ளத்தில் விழப்போன அந்த நொடியில், அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது. இதனால் ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
ஜன்னல் வழியாகக் குதித்த பயணிகளுக்குச் லேசான காயங்கள் ஏற்பட்டாலும், யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.