ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, புதிதாக 11 முக்கிய கட்டுப்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அறிவித்துள்ளார். ஈரோடு அருகே விஜயமங்கலம் பகுதியில் நாளை (டிசம்பர் 18) இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். அந்தநேரத்தில், தான் காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வரும் வழக்கத்தை விஜய் கொண்டுள்ளார். அந்தவகையில், முன்னதாக நடந்த காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கும், புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கும் விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக நிகழ்ச்சி மேடைக்கு வந்துசேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!
ஈரோடு பொதுக்கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு:அந்தவகையில், கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதாலும், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டம் என்பதாலும், விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனெனில், செங்கோட்டையன் அதிமுகவில் எம்ஜிஆர் காலம் முதல் பணியாற்றிய மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவ்வாறு, நீண்ட நெடிய அரசியல் அணுபவம் கொண்ட அவரது தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், இக்கூட்டத்தில் எந்த தவறுகளும் நடைபெற வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதோடு, விஜய் எங்கு சென்றாலும் கட்டற்ற மக்கள் கூட்டம் திரள்வது என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதோடு, செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களுக்கு என்றும் தனியாக மக்கள் செல்வாக்கு உள்ளது. மேலும், ஈரோடு செங்கோட்டையனின் சொந்த தொகுதி என்பதால், மக்கள் கூட்டம் எந்தளவுக்கு கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்:இதனிடையே, பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு ஆயுதங்கள், தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பட்டாசுகளை கொண்டு வரக் கூடாது என்றும், இதனை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழிகளிலும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுப்பு:குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் ஊர்வலம், ரோடு ஷோ அல்லது வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நபர்கள் பயணிக்கும் வாகனங்களை பின்தொடருதல், அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் கூரை மீது அமர்ந்தோ அல்லது நின்றோ பயணம் செய்யக் கூடாது என்றும், வாகன எண் பலகைகளை மறைத்து கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு வருவதும் அனுமதிக்கப்படாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஓபிஎஸ்-டிடிவிக்கு நோ சொன்ன இபிஎஸ்…அதிருப்தியில் பாஜக…அடுத்த நகர்வு என்ன!
பொதுக்கூட்டத்தின் போது யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அங்குள்ள மருத்துவ குழுவை அணுக வேண்டும் என்றும், அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை மீறி முன்நோக்கி செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்து, பொதுக்கூட்டம் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ் துறை கேட்டுக்கொண்டுள்ளது.