அண்ணாமலை கண்டனம் : இது விபத்து அல்ல; திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை..!
Top Tamil News December 18, 2025 12:48 AM

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும், அரசுப் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம். பல பள்ளிகள், கட்டடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதல்வரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை.

ஏழை, எளிய குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை, திமுக அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததன் விளைவு, இன்று வாழ வேண்டிய ஒரு குழந்தையைப் பறி கொடுத்திருக்கிறோம். இதனை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.

திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும். வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகிய இருவருமே இதற்கு முழுப் பொறுப்பு. இனியும், அரசுப் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யாமலிருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.