திமுக தலைவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் பதவிகள் கிடைத்தால் போதுமா? தமிழகத்தின் படித்த பட்டதாரிகளின் கனவு மெய்ப்பட வேண்டாமா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
''கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் 40%க்கும் மேற்பட்ட கேள்விகளும், இரண்டாம் தாளில் 96%க்கும் மேற்பட்ட கேள்விகளும் தவறாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பல்லாயிரக்கணக்கான தேர்வர்களை அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டு திமுக அரசு பறிக்கிறதா?

தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர் உட்பட ஏராளமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ள போதிலும், ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாகத் தேர்வுகளை நடத்துவதில்லை, அப்படியே நடத்தினாலும் தப்பும் தவறுமாகப் பிழையுள்ள வினாத்தாள்களைக் கொடுத்து தேர்வர்களின் பலமாத உழைப்பைக் கேள்விக்குறியாக்குகிறார்கள். அரசுத் தேர்வுகளைக் கூட முறையாக நடத்தும் திராணியற்ற திமுக அரசுக்கு, கல்விக்கு விழா எடுப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
திமுக தலைவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் பதவிகள் கிடைத்தால் போதுமா? தமிழகத்தின் படித்த பட்டதாரிகளின் கனவு மெய்ப்பட வேண்டாமா? ஒருவேளை இந்த ஆசிரியர் தகுதித் தேர்விலும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்குவதற்காக வேண்டுமென்றே இத்தனை குளறுபடிகளை அரசு திட்டமிட்டதா?
எனவே, குறைகளைச் சுட்டிக்காட்டிய தேர்வர்கள் மீதே குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, இவ்விவகாரம் தொடர்பாக உண்மையான ஆய்வு அறிக்கையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.'' என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.